அனுமன்
வாலில் பொட்டிட்டுப் பிரார்த்தனை:
பாண்டவர்களில் பராக்கிரமசாலியாக விளங்கிய பீமன், திரௌபதி விரும்பிய பாரிஜாத மலரைத் தேடிக் கானகம் சென்றான். வழியில் கிழ குரங்கு ஒன்று, நடுவில் வாலை நீட்டிப் படுத்திருந்தது. அதைத் தாண்டிப்போக விரும்பாமல், வாலைச் சற்றுத் தள்ளி வைத்துக்கொள்ளும்படி சொல்ல, ‘நான் மிகவும் களைப்புடன் படுத்திருக்கிறேன். முடிந்தால், நீயே என் வாலை தள்ளி வைத்துவிட்டுச் செல்’ என்றது குரங்கு. அதன்படியே, அதன் வாலை பீமன் அலட்சியமாக நகர்த்த முயன்றபோது, ஒரு துளிகூட அதை அசைக்க முடியாமல் போகவே, அதிர்ந்து போனான் பீமன். கர்வம் அடங்கினான். பின்பு, அந்தக் குரங்குதான் ஸ்ரீ அனுமன் என்பதை அறிந்து, ‘நான் அனுமனின் பக்தன். என்னால் முடியும்’ என்று சொல்லியபடி வாலை நகர்த்த முயல, அனுமன் மகிழ்ந்து அவனுக்குத் தன் வாலை நகர்த்தி உதவினார்.
‘அனுமனின் வாலுக்கே இத்தனைச் சக்தி இருக்கிறதே! இதை வணங்கினாலே அருள் பெறலாமே’ என்று எண்ணினான் பீமன்.எனவே, வால் வழிபாடு விசேஷம்!
அனுமனின் அருளை எளிதில் பெற, வாலில் பொட்டு வைத்து வழிபடலாம். அதேபோல், மங்கல வடிவான மணியைக் கட்டி வழிபடும் வழக்கமும் உண்டு. அனுமனின் வாலில் நவகிரகங்கள் சேர்ந்திருப்பதாக அவரது வழிபாட்டுக் கல்பம் கூறுகிறது. ஏழரைச் சனி காலங்களில் அனுமன் வழிபாடு, நம்மை அரணெனக் காக்கும்.
ஞானம், பலம், வீரம், பக்தி, சேவை, விநயம், பிரம்மசர்யம், சாதனை, யோகம் இவற்றில் உச்சத்தில் இருக்கும் அனுமனைத் தோத்திரம் செய்தால் நமக்கு எல்லாவற்றிலும் வெற்றி நிச்சயம்!
ராமநாமம் நினைப்போம்!
ராமநாமம் துதிப்போம்! !
ராமநாமம் பற்றி நிற்போம் நாளும்