திவ்ய தேசம் -நாச்சியார் கோவில்
திவ்ய தேசம்-14
பெரியவர்களை சந்தித்து வாழ்த்துப் பெறுவது சாப விமோசனத்திற்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும். பகவான் நேரடியாக சில அணு கிரகங்களை செய்கிறார். பெரும்பாலான உதவிகளை முன்பின் தெரியாதவர் மூலம் செய்கிறார்.ஆச்சாரியனுடைய அனுக்கிரகம் பெற்றுவிட்டால் பகவானுடைய கருணைக்கு இலக்காகி விட்டோம் என்பது பொருள். வைஷ்ணவ சித்தாந்தமே ஆச்சாரியன் மூலம் பகவானை சரணாகதி அடைவது தானே!!
ஆனால் திருநறையூரில் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்தது. எல்லோருக்கும் ஆச்சார்யன் ஸமாச்சரயனம் செய்து வைப்பது வழக்கம். ஆனால் தனது பக்தன் ஒருவருக்கு பகவானே இத்தளத்தில் ஸமாச்சரயனம் செய்து வைத்தார் என்பது ஆச்சரியம்தானே!
கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் தெற்கே அமைந்திருப்பது நாச்சியார்கோவில். பிரம்மாண்டமான இந்த கோயில் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பும் 690×288 அடி நீள அகலம் கொண்டு- 75 அடி உயரமுள்ள ஐந்து நிலையான ராஜ கோபுரத்தையும், ஐந்து பிரகாரங்களையும் தன்னுள் கொண்டது.
- மூலவர்- சீனிவாச பெருமாள் நின்ற கோலம்.
- தாயார்- வஞ்சுள வல்லி
- தீர்த்தம்-மணிமுத்தா நதி என்கிற குளம்.இது 684×225 நீள அகலம் கொண்டது.இது தவிர ஸங்கர்ஷன பிரத்யும்ன,அனிருத்தன், ஸாம்ப என்ற நான்கு தீர்த்தங்களும் உண்டு.
- விமானம்-ஸ்ரீநிவாசா விமானம்,ஹேம விமானம்,
- விருட்சம்-வில்வம்,வகுளம், மகிழ மரம்.
படைப்புத் தொழிலை செய்து வந்த பிரம்மதேவன் ஒருமுறை சரியாக தன் தொழிலை செய்யாததால் முனிவர்கள் சாபம் பெற்றான்.சிவபெருமானும் பிரம்மாவை கைவிட்டார். அப்போது திருநறையூரில் உள்ள ஸ்ரீநிவாச பெருமாளை அங்குள்ள சங்கர்ஷன குளத்தில் நீராடிய பின் வழிபட்டால் பிரம்மனுக்கு ஏற்பட்ட சாபம் விலகும் என்று அசரீரி கூறியதால் பிரம்மன் இங்கு வந்து வழிபட்டார். சாப விமோசனம் பெற்றார்.
இந்திரனும் தன் மேலிருந்த சாபத்தைப் போக்க இந்த தளத்தில் உள்ள அனிருத்தன் தீர்த்தத்தில் நீராடி சீனிவாச பெருமாளை தரிசனம் செய்து தனது நீண்டநாள் சாபத்தைப் போக்கிக் கொண்டான். மற்றொரு முக்கியமான ஸாம்ப தீர்த்தத்தில் சப்தரிஷிகளும் அமர்ந்து சீனிவாச பெருமாளை நோக்கி தவம் செய்தனர்.பானுதத்தன் என்னும் அரக்கனுக்கும் பகவான் கருணை காட்டி அவனது பாவங்களையும் தோஷங்களையும் தீர்த்தார் என்பது வரலாறு.
இங்குள்ள வஞ்சுள மரத்தடியில் மேதாவி முனிவர் பெண் குழந்தையான நீளா தேவியை கண்டு அதற்கு வஞ்சுளவல்லி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்.பின்பு இறைவனுக்கே மணமுடித்துக் கொடுத்தார். திருமகளுக்கு ஸ்ரீரங்கம், பூமி மகளுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர், நீளாதேவிக்கு திருநறையூர் என்ற பெயர் உண்டு.
இங்குள்ள கல்கருடன் விசேஷமானது. கருட வாகனத்தின் பொழுது சன்னதியில் 4 பேர்கள் மட்டுமே தூக்கி வரும் கருடவாகனம் சிறுக சிறுக கணத்து அதை தூக்க பின்னர் 64 பேர்கள் தேவைப்படும்.
பெருமாள் கருட வாகனத்திலும்,தாயார் அன்ன வாகனத்திலும் எழுந்தருள்வதை காண கண் கோடி வேண்டும். திருமங்கை ஆழ்வாருக்கு பெருமாள் ஸமாச்சரயனம் செய்து வைத்த தலம் என்பது மிகவும் சிறப்புடையது.
திருமங்கையாழ்வார் 110 பாசுரங்களை இப்பெருமான் மீது பாடியிருக்கிறார்.
பரிகாரம்
48 நாட்கள் இந்தப் பெருமாளை சுற்றிவந்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும். எல்லா விதமான மன நோய்களும் விலகும். மேலும் முன்னோர்கள் சாபம் உடனடியாக நீக்கவும், தெய்வ குற்றம் செய்திருந்தாலும் அந்த பழி விலகவும்,துஷ்டர்களோடு சேர்ந்து செய்ய தகாத காரியங்களை செய்து அனைவருடைய கோபத்துக்கு ஆளாகி இருந்தாலும், பஞ்சமா பாதகங்களை செய்திருந்தாலும், அப்பெரும் பாவங்களைப் போக்கவும் இங்கு வந்து நான்கு வகை தீர்த்தங்களிலும் ஸ்நானம் செய்து ஸ்ரீநிவாசப் பெருமாளை சரணடைந்து விட்டால் அத்தனையும் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் தென்றலும் வீசும். மகான்களது அனுக்கிரகம் தொடர்ந்து கிடைக்கும்.
கோவில் இருக்கும் இடம்