திவ்ய தேசம்-திரு கபிஸ்தலம்
திவ்ய தேசம்-9
பெரும்பாலும் பெருமாள் மிகவும் விரும்பி அமர்கின்ற இடம் தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் காவிரிக் கரையோரம் என்பது அத்தனை வரலாறுகளும் மிக அழகாக எடுத்துச் சொல்கின்றன.
பகவான் மிகவும் ஆசைப்பட்டு நடந்த இடம் , இருந்த இடம் , சயனம் செய்த இடங்களிலெல்லாம் ஏதாவது ஒரு ஆச்சரியமான சம்பவங்களை பக்தர்களுக்காக செய்து காட்டி மகிழ்வித்திருக்கிறார்.இதுவரை பகவான் யாரையும் புண்படுத்தியதில்லை. தன்னைக் குறை சொல்பவர்களையும் காப்பாற்றி வாழ்க்கையைத் தந்திருக்கிறார். ஆதிமூலமே என்று அழைத்த போது காப்பாற்றிய திருத்தலம் தான் கபிஸ்தலம்.
கும்பகோணம் திருவையாறு வழிப்பாதையில் பாவநாசத்திற்கு கிழக்கே மூன்று கிலோ மீட்டர் தொலைவில் , கொள்ளிட ஆற்றின் தென் பகுதிக்கும் காவிரியாற்றின் வடபகுதிக்கும் இடையில் அமைந்திருக்கிறது ஸ்ரீ கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயில்.
- புஜங்க சயனம் கிழக்கு நோக்கிய மூன்று நிலை கோபுரம்.பாம்பணையில் பள்ளி கொண்டு காட்சிளிக்கிறார்.
- தாயார் ரமாமணிவல்லி பொற்றாமரையாள்
- தீர்த்தம் கஜேந்திர புஷ்கரணி, கபிலதீர்த்தம்.
- கோயிலின் விமானம் சுகநாக்கருதி விமானம்.
‘ வாலி’க்கு பெருமாள் நேரடியாக காட்சி கொடுத்த ஸ்தலம் என்பதால் கபிஸ்தலம் என்று பெயர் உருவாயிற்று.
பெருமாளின் விளையாட்டுகளில் இன்றைக்கும் முக்கியமாக நம் நினைவுக்கு வருவது கஜேந்திர மோட்சம்.அது நடந்த இடம் இந்த கபிஸ்தலத்தில் தான் என்பதால் மிகவும் புண்ணியமான தலமாக காலம் காலமாக போற்றப்பட்டு வருகிறது.
இந்திரா ஜிம்னன் என்னும் அரசன் , துர்வாச முனிவரை சரிவர மதிக்காமல் போனதால் துர்வாச முனிவர் , மன்னனை யானையாக மாற்றிவிட்டார்.இதையறிந்த மன்னன் , தனக்கு எப்படி சாப விமோசனம் கிடைக்கும் என்று கேட்ட பொழுது , ” நீ யானையாக இருந்தாலும் திருமாலின் மீது பக்தி கொண்டிருப்பாய்.ஒருசமயம் ஒரு முதலை உன் காலைக் கவ்வும் . அப்பொழுது மகாவிஷ்ணுவை அழைப்பாய் அப்பொழுது விஷ்ணு முதலையிடமிருந்து உன்னைக் காப்பாற்றி இந்த சாபத்திலிருந்து மீட்பார் ” என்று துர்வாச முனிவர் வழியும் காட்டினார்.
அகத்திய முனிவர் ஒருசமயம் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த பொழுது , குஹி ‘ என்னும் அரக்கன் விளையாட்டிற்காக தண்ணீரில் மூழ்கி முனிவரின் காலை இழுத்து துன்புறுத்த – கோபம் கொண்ட முனிவர்.குஹியை முதலையாக மாற்றிவிட்டார்.தான் செய்த தவற்றை உணர்ந்த ‘ குஹி ‘ அகத்தியரிடம் மன்னிப்பு கேட்டு சாபம் நீங்க வழி கேட்டபொழுது ” கஜேந்திரன் என்னும் யானை இத்தலத்தில் நீர் அருந்த வரும்பொழுது நீ அதன் காலைப் பிடித்து இழுப்பாய் . அப்பொழுது திருமால் கருடன் வாகனத்தில் வந்து கஜேந்திரன் என்ற அந்த யானையை உன்னிடமிருந்து காப்பாற்ற உன் மீது சக்ராயுதத்தை வீசுவார் . அப்போதுதான் உனக்கு சாப விமோசனம் ‘ என்று சொல்லி மறைந்தார்.
அதன்படியே முதலை அந்த கஜேந்திர யானையைக் கவ்வ ‘ ஆதிமூலமே ‘ என்று அந்த யானை விஷ்ணுவை நோக்கிக் கதற , பெருமாள் கருட வாகனத்தில் தோன்றி கஜேந்திரனுக்கு உயிர்ப் பிச்சையும் , அந்த முதலைக்கு சாப விமோசனமும் கொடுத்தார். அதனால்தான் இப்போதும் இத்தலத்தில் பங்குனி மாதம் கஜேந்திர மோட்ச விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பரிகாரம் :
விசாகம் நட்சத்திரகாரர்கள் வணங்க வேண்டிய தலம்.பலவாறு வாழ்க்கையில் வறுமைப் பிடியில் சிக்கித் தவிப்பவர்கள் ; தொழிலில் நஷ்டமடைந்து வேறு எதுவும் செய்வதறியாமல் துடிப்பவர்கள் , விரோதிகளின் மத்தியில் மாட்டிக் கொண்டு உயிருக்குப் பயந்து கொண்டிருப்பவர்கள் , நல்லவர்களின் சாபத்தினால் அவதிப்படுபவர்கள் . நோயினால் ஒவ்வொரு நாளும் துடித்துக் கொண்டிருப்பவர்கள் அத்தனை பேர்களும் தங்களது கஷ்டங்கள் நீங்க இங்கு வந்து ஒருநாள் முழுவதும் தங்கி அர்ச்சனை ஆராதனை செய்து மனமுவந்து பிரார்த்தனை செய்தால் அவர்களுக்கு பகவான் கருடன் மூலம் பறந்து வந்து கஷ்டங்களைப் போக்கி உயிர் காத்து அருள்வான் என்பது உண்மை !
கோவில் இருப்பிடம்