துலாம் -பொறுப்பு
(சித்திரை 3,4,சுவாதி ,விசாகம் 1,2,3)
சுக்கிர பகவானின் அருள் பெற்ற துலாம் ராசி அன்பர்களே !!! இதுவரை உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்ந்திருந்த சனி பகவான் இப்போது உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் வந்து அமர்வதால் குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். ஆயினும் உற்சாகமாக செயல்படுவீர்கள். உங்கள் கடமைகளை எல்லாம் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
கடந்த மூன்று ஆண்டுகளாக அர்த்தாஷ்டம சனியாக உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் இருந்த சனிபகவான், பலவிதமான கஷ்டங்களை தந்து இருப்பார். மிக கடினமான காலகட்டங்களை எல்லாம் தாண்டி வந்து விட்டீர்கள். வீடு, வண்டி, வாகனம் வகையில் ஏற்பட்ட கடன் அனைத்தும் இந்த சனிப்பெயர்ச்சியில் முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த அச்ச நிலை இனி இருக்காது. பிரிந்து வாழ்ந்த கணவன் மனைவி மீண்டும் ஒன்று சேருவீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.
அதே சமயம் பூர்வீக சொத்தில் பிரச்சனை ஏற்படும். சிலர் சொந்த ஊரை விட்டு செல்ல நேரலாம். தேவையில்லாத கவலையால் சமயத்தில் எதிர்மறை எண்ணங்கள் உருவாகும். யோகா, தியானம், ஆலய வழிபாடு மூலம் சரி செய்து கொள்வீர்கள். பணியிடங்களில் சற்று பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது.
பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. புது தொழில் தொடங்குவீர்கள். நல்ல லாபம் வரும். வேலை பளு அதிகரிக்கும். அரசு அனுகூலம் உண்டாகும். சிறு தொழில் செய்வோருக்கு நல்ல லாபம் வரும். தக்க சமயத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மூத்த சகோதரர் வகையில் லாபம் உண்டு.
இல்லத்தரசிகளுக்கு இது பொற்காலம். கணவர் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார். சிலர் புது வீட்டிற்கு தனி குடுத்தனம் செல்வீர்கள். அலுவலகம் செல்லும் பெண்களுக்கு பணிசுமை அதிகமாக இருந்தாலும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். கன்னிப் பெண்களை பொறுத்தவரை திருமணம் தாமதமாகும். உயர்கல்வி படிக்க வெளியூர் செல்வீர்கள்.
இதையும் கொஞ்சம் படிங்க : 12 வீடுகளில் சனி நின்ற பலன்கள்
வியாபாரிகளுக்கு இது சாதகமான சனிப்பெயர்ச்சியாகும். கூட்டுத்தொழில் அதிக லாபம் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி ஏஜென்சி, ஸ்பேர் பார்ட்ஸ் விற்பவர்கள், காபி ஷாப், ஹோட்டல், பேக்கரி, பூ வியாபாரம், ஆயில் ஸ்டோர், லாயர், ஷேர் மார்க்கெட், அழகு சாதன கடை வைத்திருப்பவர்களுக்கு நல்ல லாபம் வரும்.
அலுவலகத்தில் வேலை செய்பவர்களை பொறுத்தவரை மேல் அதிகாரியின் நம்பிக்கையை பெறுவீர்கள். கொடுத்த வேலையை நல்லபடியாக முடிப்பீர்கள். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சம்பளம் அதிகரிக்கும். ஐ.டி மற்றும் மீடியாவில் வேலை பார்ப்பவர்களுக்கு யோகமான சனிப்பெயர்ச்சி இதுவாகும்.
சனி பகவான் பார்வை பலன்கள்
சனிபகவான் உங்கள் ராசிக்கு2,7,11 இடங்களை பார்வை செய்வதால் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சனிபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டை பார்ப்பதால் கவனமாக பேசவும். விளையாட்டாக சொன்னது கூட சமயத்தில் வினையாகும். சில நேரங்களில் உங்களையும் அறியாமல் உணர்ச்சிவசப்பட்டு பேசுவீர்கள். அதனால் நீண்ட நாள் நட்பை ஒரு நொடியில் இழக்க நேரலாம். இந்த காலகட்டத்தில் பண விஷயத்தில் பிறர்க்காக ஜாமீன் கொடுக்க வேண்டாம்.
சனிபகவான் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டை பார்ப்பதால் கணவன் மனைவி இருவரும் வேலை நிமித்தமாக பிரிந்து வாழ நேரலாம்.
சனிபகவான் உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டை பார்ப்பதால் ஷேர் மூலம் திடீர் லாபம் வரும். தக்க நேரத்தில் அரசு அதிகாரிகள் உதவுவார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் ஒருவழியாக முடியும். கடன் கொடுத்த பணம் வசூலாக காலதாமதம் ஆகும்.
பலன் தரும் பரிகாரம்
மூல நட்சத்திரம் வரும் நாளில் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வழிபடுங்கள். எதிர்பார்த்த சுப காரியம் நல்லபடியாக நடைபெறும்.