வைகுண்ட ஏகாதசி
மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. திருமங்கையாழ்வார் மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி உற்சவமாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார்.
வைகுண்ட ஏகாதசி நாள் -2023:2nd of January 2023
ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராம் தினம் என்று பொருள், ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து, மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தி தியானம் இருப்பதே ஏகாதசி விரதம், உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றி இருப்பதே உண்மையான உபவாசம் ஆகும்.
இத்தகைய பெருமைக்குரிய மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி அன்று சொல்லப்படுகின்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெறுகிறது. ஆண்டு முழுவதும் அடைத்து வைத்திருக்கும் கதவு வைகுண்ட ஏகாதசி இன்று மட்டும் தான் திறந்து வைக்கப்படும். சொர்க்க வாசலின் வழியாக நாம் நுழைந்து வந்தால் சிக்கல்கள் தீரும், செல்வ வளம் பெருகும்.
விஷ்ணுபகவான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது அவருடைய இரு காதில் இருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் தோன்றினார்கள். அந்த இருவர்களும் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தார்கள். இந்த அசுர சகோதரர்களை அடக்க விஷ்ணு பகவான் ஒருவரே என்ற முடிவில் தேவர்கள் முறையிட பெருமாள் அசுரர்களுடன் போர் புரிந்தார். விஷ்ணுவிடம் அசுர சகோதரர்கள் சரணடைந்தார்கள்.
பகவானே! தங்களின் சக்தியால் உருவான எங்களுக்கு நீங்கள் தான் கருணை காட்ட வேண்டும் என்று வைகுண்டத்தில் பெருமாளுடன் இருக்கும் பாக்கியத்தைப் பெற்றார்கள். இந்த அசுர சகோதரர்கள் தங்களைப் போல் பலரும் இந்த பாக்கியம் பெற வேண்டும் என்று எண்ணி பெருமாளிடம் வேண்டினார்.
எம் பெருமாளே! தாங்கள் வைகுண்ட ஏகாதசி நாளில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக அர்ச்சவதாரத்தில் வெளிவரும் போது தங்களை தரிசிப்பவர்களுக்கும், அவர்கள் செய்த பாவங்களை நீக்கி அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர் அசுர சகோதரர்கள்.
அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் ஏகாதசி விழா உற்சவம் சீரும் சிறப்புமாக நடைபெறும்.
இந்த கண்கொள்ளா காட்சியை கண்டு மகிழ்ந்தால் பொன்னும், பொருளும் சேரும் மேலும் செல்வாக்கு உயரும்.
பதினாறு பேறுகளுக்கும் சொந்தமான விஷ்ணுவை பெருமாள் என்று அழைக்கின்றோம். பெருமாளை வழிபட்டால் நமக்கு பதினாறு விதமான பேறுகளும் வந்து சேரும் என்பது அனுபவத்தில் காணலாம்.