குரோதி வருட பலன்கள் 2024-மிதுனம்
புதன் பகவானின் அருள் பெற்ற மிதுன ராசி அன்பர்களே!! உங்கள் ராசியின் அதிபதியான புதன் நீசமாகி வக்கிரமாகி உள்ளார்.எனவே உச்சநிலையை அடைகிறார். இந்த வருடம் சற்று தேங்கி நின்று தடையாகி பின் வேகம் எடுத்துச் செல்லும். உங்கள் ராசிநாதன் இருக்கும் நிலையானது உங்கள் காரியத்தில் கண்ணாக இருக்க செய்யும். சுயநலமாக சிந்திக்க தூண்டும். பிறருக்கு உதவி செய்து நீங்கள் ஏமாற்றமடைந்ததால் ஏற்பட்ட பின் விளைவாகவும் இருக்கக்கூடும்.
உங்களின் விடாமுயற்சி வெற்றியாகி பணம் வந்து கொட்டும். சிலர் தங்கள் வாரிசுகளின் பெயரில் பெரிய தொழில் கூடங்களை திறந்து விடுவீர்கள். சிலர் வெளிநாட்டிற்கு சென்று முதலீடு செய்து விடுவீர்கள்.
மிதுன ராசி பெண்களுக்கு கரு தங்குவதில் சற்று சிரமம் ஏற்படும். எனவே கர்ப்பமான பெண்கள் முழு மருத்துவரின் கண்காணிப்பில் இருந்தால் அழகான, ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கலாம். நெடு நாட்களாக குழந்தைக்காக மருத்துவ உதவி பெற்றவர்கள் இந்த வருடம் செயற்கை கரு வளர்ச்சி மூலம் வாரிசு கிடைக்க வழிவகை உண்டாகும். உங்களில் சில பெண்கள் கல்வி விஷயமாக வெளிநாடு செல்வர்.
பங்கு வர்த்தகம் எத்தனை வருமானம் தருகிறதோ! அத்தனை இழப்பும் தரும். உங்களுக்கு இப்போது உண்டாகும் காதலி மிகப்பெரிய அந்தஸ்து உள்ள இடத்தை சேர்ந்தவராக இருப்பார்.
இந்த வருடம் உங்கள் தந்தைக்கு ஒரு அறுவை சிகிச்சை நடக்கும் சூழ்நிலை ஏற்படும். உங்களுக்கு காலில் அடிபடக்கூடும். வெளிநாட்டு தொழிற்சாலையில் பணிபுரியும் வாய்ப்பு உண்டு. அரசியலில் மந்திரிகளுக்கு உதவியாளராக இருக்க முடியும்.
இந்த வருடம் திருமணமாக வேண்டியவர்களுக்கு திருமணம் கைகூடிவரும். வரன் மிகவும் புகழ்பெற்றவராக இருப்பார். அல்லது அரசியல் பின்புலம் உடைய குடும்பமாக அமைவார். பத்திரிக்கை துறை அல்லது டிவி போன்றவற்றைச் சேர்ந்தவராக இருப்பார். எது எப்படி இருப்பினும் திருமணம் சம்பந்தம் மட்டுமின்றி இது தொழில் சம்பந்த நிகழ்வாகவும் இருக்கும்.
இந்த வருடம் மிதுன ராசியினரின் தொழில்வலம் மிகப் பெருகும். செழிப்பாக வளரும். உங்கள் யூகங்கள் தொழிலை மிக மேன்மையாக அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். சில வாரிசுகளின் பயணமும், உழைப்பும் தொழிலை முதன்மைக்கு நகர்த்தும். உங்கள் தொழில் வெளிநாட்டிலும் பரவி பரவசமாகும். இந்த வருடம் தொழில் தொடங்கலாமா என யோசித்துக் கொண்டிருந்தவர்கள் சட்டென்று தொழில் தொடங்கி விடுங்கள், அதற்கான தரவுகளும், அரசு ஆதரவும் அவரின் அபரிமிதமாக கிடைக்கும்.
உங்கள் விரையாதிபதி(சுக்ரன்) உச்சம் எனவே செலவுகள் அதிகமாக இருக்கும். அதனையும் முதலீடாக மாற்றி விடுவீர்கள். வெளிநாட்டு பயணம் மிக அதிகமாக அமையும். நிறைய சுப செலவுகள் ஆகும் என்பது தான் நிம்மதி.
பரிகாரம் :
திருவெண்காடு சென்று தீபம் ஏற்றி வணங்கவும். சனி+செவ்வாய் சேர்க்கைக்கு புதன்கிழமை மரிக்கொழுந்து மாலை, பாசிப்பருப்பு கலந்த பொங்கலுடன், அகலில் இலுப்பெண்ணை ஊற்றி, 23 மிளகாய்ப் பச்சை நிற துணியில் மூட்டை கட்டி, பச்சை நிற திரியிட்டு ஏற்றவும். அருகில் உள்ள பள்ளியின் தேவையை அறிந்து உதவுங்கள். இந்த புது வருடம் உங்களுக்கு அதிர்ஷ்டமும், அன்பும் நிறைந்த வருடமாக அமையும்