ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 – கும்பம்
ஐப்பசி 13, அக்டோபர் 30ம் தேதி திங்கட்கிழமையில் திருக்கணிதப்படியும்,இதே ஐப்பசி 21, நவம்பர் 7 செவ்வாய்க்கிழமை வாக்கியப்படியும்,இராகுபகவான் மேஷ ராசியின் அஸ்வினியின் முதல் பாதத்திலிருந்து மீன ராசியின் ரேவதியின் 4 ஆம் பாத மீன ராசிக்கும்,கேது பகவான் துலாமிலுள்ள சித்திரை 3 ஆம் பாதத்திலிருந்து சித்திரை 2 ஆம் பாதமுள்ள கன்னி ராசிக்கும் பெயர்ச்சியாகின்றார்.
சனி பகவானை ஆட்சி வீடாக கொண்ட கும்ப ராசி அன்பர்களே !!!
2-இல் ராகு -குடும்ப ராகு
ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் வந்து அமர்கிறார். பணம் எவ்வளவு வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி, தவிர்க்க முடியாத செலவுகளும் அடுத்தடுத்து வரும். சில வேலைகள் தடைப்பட்டு முடியும்.
வாக்கு ஸ்தானத்தில் ராகு நுழைந்திருப்பதால், சங்கடங்களில் சிக்காதபடி சமயோசிதமாகப் பேசவேண்டும் நீங்கள் நல்லதைச் சொல்லப் போக, அதைச் சிலர் வேறுவிதமாகப் புரிந்துகொள்வார்கள்.
உங்களின் முன்கோபத்தால் சிலரின் நட்பை இழக்க வேண்டியது வரும். குடும்பத்தில் எப்போதும் பிரச்னை இருப்பது போல தோன்றும் அவ்வப்போது தர்மசங்கடமான சூழ்நிலையில் சிக்குவீர்கள்.
மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ளாதீர்கள். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள், இனி திருப்பித் தருவார்கள். இளைய சகோதரருடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். சகோதரியின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள்.
அறுவை சிகிச்சைகள் தொடர்பாக ஒன்றுக்கு மேற்பட்ட மருத்துவர்களின் கருத்துகளையும் கேட்டறிந்து முடிவெடுப்பது நல்லது.
8-இல் கேது -அஷ்டம கேது
கேது உங்களின் ராசிக்கு எட்டில் வந்து அமர்கிறார். கொஞ்சம் அலைச்சல் இருக்கவே செய்யும். அதேபோல் உங்களின் அடிமனதில் ஒருவித பயம் இருக்கவும் செய்யும். எந்த வகையிலும் சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட வேண்டாம்; வீண் பிரச்னைகளில் சிக்கிக் கொள்வீர்கள் அதேபோல், குறுக்குவழியில் சம்பாதிப்பவர்களின் நட்பையும் தவிர்த்துவிடுவது நல்லது.
கணவன் மனைவிக்குள் அவ்வப்போது சண்டை வரும். மனைவியுடன் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. சிறுநீரகத் தொற்று, பைல்ஸ் பிரச்னை போன்ற சிரமங்கள் ஏற்படலாம். அவ்வப்போது வரும் வீண் கவலைகள், கனவுத் தொல்லையால் தூக்கம் கெடும். வெளிவட்டாரத்தில் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிப்பது நல்லது.
மற்றவர்களிடம் பேசும்போது தடித்த வார்த்தைகள் வேண்டாம். உறவினர்கள் உங்கள் உண்மை நிலையை புரிந்துகொள்ளாமல் அவ்வப்போது உதவி கேட்டுத் தொந்தரவு தருவார்கள்.
பலன் தரும் பரிகாரம்
திருக்கோயில் திருப்பணிகளுக்கு இயன்ற உதவியை வழங்குவது சிறப்பு.
புற்றுக் கோயில்களுக்குச் சென்று தீபமேற்றி வழிபட்டு வரலாம்.
அம்மன் கோயில் விளக்குப் பூஜைகளில் கலந்து கொண்டு வழிபடலாம்.