சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள் 2023-மேஷம்
ஸ்ரீ மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 1-ம் தேதி(14.04.2023) வெள்ளிக்கிழமை, சூரிய உதயாதி 22-25 நாழிகை அளவில் பகல் 2:59 மணிக்கு சிம்ம லக்னம், கடக நவாம்சத்தில் சூரிய பகவான் மேஷ ராசியில் பிரவேசிக்கும் காலம் மங்களகரமான சோபகிருது வருடம் பிறக்கிறது.
செவ்வாய் பகவானின் அருள் பெற்ற மேஷ ராசி அன்பர்களே!! இந்த வருடம் சித்திரை 8-ம் தேதி முதல் வருடம் முடிவு வரை குருபகவான் உங்கள் ராசியிலேயே ஜென்ம குருவாக சஞ்சாரம் செய்கிறார்.
வருட ஆரம்ப முதல் ராகுவும் கேதுவும் உங்கள் ராசிக்கு 1மற்றும் 7-ம் இடங்களிலும் ஐப்பசி 13-ம் தேதி முதல் ராகுவும் கேதுவும் உங்கள் ராசிக்கு 12 மற்றும் 6-ம் இடங்களிலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.
வருடம் முழுவதும் சனிபகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமாகிய 11-ம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். இதன் மூலம் இவ்வருடம் தெய்வீக யாத்திரைகள் மேற்கொள்வீர்கள். நல்ல தரிசனம் கிடைக்க பெறுவீர்கள்.
கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்சனைகள் தீரும். மனைவியின் ஆரோக்கியத்தில் இருந்த குறைபாடுகள் சரியாகும். ஐப்பசி 13-ம் தேதிக்கு பிறகு பழைய பாக்கிகள் வசூல் ஆகும். தொழில்துறையில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளை செய்யலாம். குடும்பத்தில் கோவப்படும்படியான சூழ்நிலைகள் வந்தாலும் கோபத்தை கட்டுப்படுத்திக்கொள்வதே நல்லது. குடும்பத்தில் மகன் அல்லது மகளுக்கு சுப காரியங்கள் நடக்கும்.
மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும். திருஷ்டி மிக அதிகமாக இருக்கும். ஆகவே உங்கள் செயல்பாடுகளை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
தாய்க்கு மூட்டு வலி உண்டாகும். தந்தையின் ஆரோக்கியம் சீராகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு மருத்துவ உதவியின் பெயரில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு, மனை வாங்க திட்டமிடலாம். கார்த்திகை, அமாவாசை அன்று ஆரோக்கியத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை.
பலன் தரும் பரிகாரம்
வாரம் தோறும் வியாழக்கிழமை அன்று குரு பகவானுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபடவும் மேலும் உங்கள் ஆசிரியருக்கு ஆடை தானம் செய்ய இந்த வருடம் சிறப்பான வருடமாக உங்களுக்கு அமையும்