திரு விண்ணகர் ( உப்பிலியப்பன் கோவில் )
திவ்ய தேசம்-13
பூலோகத்திலிருந்தே சொர்க்கத்தை தரிசிக்கலாம் என்று சொன்னால் யாரும் முதலில் நம்ப மாட்டார்கள். ஆனால் பகவான் நமக்குத் தரிசனம் கொடுப்பதற்காகவே பெரும்பாலும் பூலோகத்திற்கு குறிப்பாக தமிழ்நாட்டிற்கு வந்து விடுகிறார் என்பது பொய்யல்ல. ஆண்டாண்டு காலமாய் நடக்கின்ற அற்புதமான நிகழ்ச்சி. குறிப்பாக காவிரிக்கரையில் நாற்பது கோயில்களை தனக்காக உருவாக்கிக் கொண்டு அருள்பாலித்து பக்தர்களுக்கு அனுக்கிரகம் செய்து வருகிறார் என்பது வரலாற்று உண்மை. கைப்பிடித்த நாயகிக்காக உப்பில்லாமலே இன்றைக்கும் உண்டு வரும் உப்பிலியப்பன் தரிசனம் வாழ்க்கையில் எளிதில் கிடைக்காத பெரும் பேறாகும்.
கும்பகோணத்திலிருந்து ஏழு கிலோ மீட்டர் கிழக்கே அரசலாற்றின் வடகரையில் அமைந்துள்ளது திருவிண்ணகர். உப்பில்லியப்பன் திருக்கோயிலுக்கு மார்கண்டேயர் க்ஷேத்திரம் , செண்பகவனம். ஆகாசநகரம் என்று வேறு பெயர்களும் இதற்குண்டு.
ஐம்பது அடி உயர ஐந்து நிலைக் கோபுரம் , தல விமானம் சுத்தானந்த விமானம். தல தீர்த்தம் ஆர்த்தி புஷ்கரணி. ஆலயத்திற்கு வெளியே சார்ங்க தீர்த்தம் , சூர்ய தீர்த்தம் , இந்திர தீர்த்தம் , ப்ரம்ம தீர்த்தம் உள்ளது . கருடன் , காவிரி , தர்ம தேவதை , மார்க்கண்டேயருக்கு எம்பெருமான் காட்சியளித்திருக்கிறார்.
பொன்னப்பன் , மணியப்பன் , முத்தப்பன் , என்னப்பன் என்று வேறு பெயர்களும் பெருமாளுக்கு உண்டு. பூமிதேவி இறைவனுக்கு வலப்புறம் கீழே மண்டியிட்டு வணங்கும் கல்யாண கோலத்தில் இருக்கிறார்.
மிருகண்டு முனிவரின் புதல்வர் மார்க்கண்டேயர். முன்பொரு சமயம் பெருமாளை நோக்கி தவம் செய்ய வந்தார். அவருக்கு பூமிதேவி மகளானாள். திருமண வயது அடைந்ததும் அவளுக்கு மணம் செய்ய மார்க்கண்டேயர் முயன்றபொழுது , எம்பெருமானே மார்க்கண்டேயரிடம் வயதான கிழவனாக வந்து பூமிதேவியைப் பெண் கேட்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மார்க்கண்டேயர் , ” நீங்களோ வயதானவர் என் மகளோ சின்னஞ் சிறியவள்.அவளுக்கு சமைக்கக்கூடத் தெரியாது. மறந்து உணவில் உப்பு போடத் தவறினால் , தாங்கள் சினம் கொண்டு என் மகளை சாபம் இட்டு விடுவீர்கள் ‘ என்று பெண் கொடுக்க மறுத்தார்.
பகவானோ விடாப்பிடியாக ” உங்கள் மகளுக்கு சமைக்கத் தெரியா விட்டாலும் பரவாயில்லை , உப்பில்லாமல் சமைத்தால் கூட நான் விரும்பி ஏற்றுக் கொள்வேன் ” என்று பிடிவாதம் பிடிக்க மார்க்கண்டேயர் நிலை கொள்ளாமல் தவித்தார். யார் இவர் ? எதற்காக இப்படி பிடிவாதம் பிடிக்கிறார் ? என்பதை அறிய சிவபெருமானை நினைத்து வேண்டினார் . அப்பொழுது சிவபெருமான் மார்க்கண்டேய முனிவரிடம் “ வந்திருப்பது மகாவிஷ்ணு ” என்று சொல்ல மார்க்கண்டேயர் தன் மகள் பூமாதேவியை விஷ்ணுவுக்கு மணமுடித்து வைத்தார்.
உப்பில்லாத உணவை நாம் ஏற்போம் என்று சொன்னதால் இன்றுவரை உப்பில்லாத உணவை பெருமாளுக்கு நைவேத்தியமாக படைக்கப் படுகிறது . திருமங்கையாழ்வார் , நம்மாழ்வார் , பொய்கை பேயாழ்வார் , ஆகியோர் பாசுரம் செய்திருக்கின்றனர். வைகுண்டத்திற்கு சமமான ஸ்தலம் வடவேங்கடம் செல்ல இயலாதவர்கள் இந்த வேங்கடவனுக்கு செய்து கொண்ட பிரார்த்தனைகளைச் செலுத்தலாம்.
பரிகாரம்
வெகுநாட்களாக முயற்சி செய்தும் திருமணமாகாதவர்கள் பெருமாளுக்கு கல்யாண உற்சவம் செய்து வைத்தால் திருமணம் நல்லபடியாக , சீக்கிரமே நடந்துவிடும். வாழ்க்கையில் எங்கு தேடியும் நிம்மதி கிடைக்காதவர்கள் இந்தப் பெருமாளுக்கு பிரார்த்தனை செய்து அபிஷேக ஆராதனை செய்தால் முன் ஜென்ம பாவத்தை நீக்கிக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ முடியும். கோடி தீப விளக்கிற்கு தங்களால் இயன்ற காணிக்கையைச் செய்தால் பட்டுப் போன தொழில் , குடும்பம் நல்லபடியாக செழித்து வரும் என்பது இத்தலத்திற்குரியச் சிறப்பு.
கோவில் இருப்பிடம்