குரோதி வருட பலன்கள் 2024-விருச்சிகம்
செவ்வாய் ஆட்சி வீடாகக் கொண்ட விருச்சக ராசி அன்பர்களே!! வரும் குரோதி வருடம் உங்களுக்கு நன்மைகள் அதிகரிக்கக்கூடிய வருடமாக இருக்கும். அலுவலகத்தில் இதுவரைக்கும்ஏக்கமும், எதிர்பார்ப்புமாக இருந்த பதவி ஊதிய உயர்வுகள் நிச்சயம் கை கூடிவரும். உயரதிகாரிகள் ஆதரவும் உடன் இருப்பவர் ஒத்துழைப்பும் கிடைக்கும். இந்த சமயத்தில் எல்லாம் தெரியும் என்கின்ற ஆணவம் எந்த சமயத்திலும் தலை தூக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
வேலை தேடுவோருக்கு நீண்ட நாள் கனவாக இருந்த வேலைவாய்ப்பு இப்போது திறமைக்கு ஏற்ப கைகூடி மகிழ்ச்சி தரும். எந்த சமயத்திலும் நேர்மை தான் உங்களை நிமிர்ந்து நடக்கச் செய்யும். வீட்டில் விசேஷங்கள் அணிவகுத்து வர தொடங்கும். விருந்தினர் வருகையும் அதனால் சந்தோஷமும் அதிகரிக்கும். இளம் வயதினர் பெற்றோர், பெரியோரோடு மனம் விட்டு பேசுங்கள். வீடு, மனை, வாகனம் வாங்க சந்தர்ப்பம் உண்டு. பூர்வீக சொத்தில் விட்டுக்கொடுத்து போனால் நன்மைகள் அதிகரிக்கும்.
வாரிசுகள் வாழ்க்கையில் சுபகாரிய தடைகள் நீங்கும். கடன்கள் பைசல் ஆகும் அளவுக்கு வருமானம் சீராகும். சினமும், சீற்றமும் தவிர்த்தால் நன்மைகளை அதிகம் பெறலாம். புரிந்து நடந்து கொள்ளுங்கள்.
செய்யும் தொழில் படிப்படியாக வளர்ச்சி பெறும். பரம்பரை தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும். பலகாலமாக தடைபட்ட வங்கி கடன்கள் மளமளவென கிடைக்கும். வரவே வராது என்று நினைத்திருந்த கடன்கள் திரும்ப கிடைப்பது சந்தோஷம் தரும். அயல்நாட்டு வர்த்தகம் எதையும் உரிய அனுமதி பெற்று செய்யுங்கள்.
குரோதி வருட குரு பார்வை
அரசு, அரசியல் சார்ந்தவர்கள் மேலிடத்தின் ஆதரவை பெரும் சந்தர்ப்பம் அமையும். புறம், பேசும் நபர்களையும் முகஸ்துதி பாடுபவர்களையும் புறக்கணிப்பது உங்கள் புகழையும் பெருமையும் நிலைக்க வைக்கும். பொது இடங்களில் மேலிடத்தின் அனுமதி இல்லாமல் திட்டங்கள் எதையும் அறிவிக்கவோ, செயல்படுத்தவோ வேண்டாம்.
கலை, படைப்பு துறையினருக்கு திறமைக்கு உரிய முன்னேற்றம் ஏற்படும். உழைக்க தயாராக இருப்பவர்களுக்கு உள்ளூரில் மட்டுமல்ல வெளியூர், வெளிநாடுகளிலும் பெருமை கிடைக்கும். பயணத்தில் வேகமும் வித்தைக் காட்டலும் கூடவே கூடாது. தொலைதூரப் பயணம் எதையும் தொடங்கும் வழிப்பாதை விநாயகரை வணங்கி விட்டு செல்வது அதிக நன்மை தரும்.
தலைவலி, தூக்கமின்மை, அஜீரணம், அடிவயிறு உபாதைகள் வரலாம். மாதாந்திர உபாதைகளில் அலட்சியம் வேண்டாம்.
பரிகாரம்
இந்த ஆண்டு முழுக்க பழனி ராஜ அலங்கார முருகனை ஆராதியுங்கள் உங்கள் வாழ்க்கை இனிமையாக இருக்கும்