Homeஜோதிட தொடர்ஜோதிடம்: கூட்டு மரண தோஷம் என்றால் என்ன ?

ஜோதிடம்: கூட்டு மரண தோஷம் என்றால் என்ன ?

கூட்டு மரண தோஷம்

கூட்டு மரண தோஷம் என்பது ஒரு ஜாதகர் விபத்திலோ, இயற்கை சீற்றத்தினாலோ, யுத்தத்தினாலோ பலர் கூட்டமாக இறந்து போகும் சமயத்தில் அந்தக் கூட்டத்தில் தானும் ஒரு ஆளாக இறந்து போகும் தோஷம் ஆகும். இத்தகைய மரணம் குறித்து பலர் பலவாறு கேள்விகள் கேட்பதுண்டு. ஒரே நாளில் ஒரே இடத்தில் ஒரே விபத்தில் இறந்து போகும் பல நூறு பேர்களுக்கும் அல்லது பல்லாயிரம் பேருக்கு ஜாதகம் ஒரே மாதிரி தான் இருக்குமா? அத்தகைய விபத்துகளில் இறந்து போகும் அனைவருக்கும் விபத்து நடந்த சமயத்தில் தசா புத்திகள் மாரகம் காட்டுமா? அல்லது அச்சமயத்தில் உள்ள கிரகங்களின் கோச்சார நிலை மாரகம் காட்டுமா? இது போன்ற கேள்விகளுக்கு விடை என்னவென்று பார்ப்போம்..

ஒரு தனி மனிதனுடைய ஜாதகத்தில் ‘கூட்டு மரண தோஷம்’ இருந்தால் மட்டுமே அவர் கூட்டம் கூட்டமாக மக்கள் இறக்கும்போது இவரும் அதில் ஒருவராக இருப்பார். எனவே நூறு பேர்கள் கூட்டமாக இறந்தார்கள் என்றால் அவர்கள் அனைவருடைய ஜாதகத்திலும் கூட்டு மரண தோஷம் நிச்சயமாக இருக்கும் இதற்கு உதாரணமாக கீழே ஒரு ஜாதகம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட உதாரண ஜாதகர் தன் குடும்பத்தினர் 10 பேருடன் சுற்றுலா சென்ற போது வாகன விபத்தில் சிக்கி இவரும் இவர் குடும்பத்தார் அனைவரும் இறந்து விட்டனர். இதற்கு என்ன காரணம் என்று பார்ப்போம்.

நாடி ஜோதிடத்தில் ராகுவிற்கு ‘மரண காரகன்’ என்று பெயர். குருவிற்கு ஜீவகாரகன் என்று பெயர் ஜீவகாரகன் என்றால் ‘உயிர் காரகன்’ என்று பொருளாகும். அதாவது குரு ஆனவர் ஜாதகத்தில் உயிரைக் குறிப்பார். ஒரு ஜாதகத்தில் குருவும் ராகுவும் ஒரே ராசியில் அல்லது ஒன்றுக்கொன்று திரிகோணமாக இருந்தால் அதற்கு ‘மரண தோஷம்’ என்று பெயர். அல்லது லக்னாதிபதியும் ராகுவும் ஒரே ராசியில் அல்லது ஒன்றுக்கொன்று திரிகோணமாக இருந்தால் அதற்கும் ‘மரண தோஷம்’ என்று பெயர். ராகுவும் குருவும் ஒரே ராசியில் அல்லது ஒன்றுக்கொன்று திரிகோணமாக இருக்க அவர்கள் நின்ற அதே திரிகோணத்தில் மேலும் சில கிரகங்கள் இருக்குமானால் அதற்கு ‘கூட்டு மரண தோஷம்’ என்று பெயர். அல்லது லக்னாதிபதியும் ராகுவும் ஒரே ராசியில் அல்லது ஒன்றுக்கொன்று திரிகோணமாக இருக்க அவர்கள் நின்ற அதே திரிகோணத்தில் மேலும் சில கிரகங்கள் இருக்குமாயின் அதற்கும் ‘கூட்டு மரண தோஷம்’ என்று பெயர்.

மேற்கண்ட உதாரண ஜாதகத்தில் குரு ராகு லக்னாதிபதியான சந்திரன் மற்றும் செவ்வாய், சுக்கிரன் ஆகிய ஐந்து கிரகங்களும் ஒன்றுக்கொன்று திரிகோணமாக அமைந்துள்ளன எனவே ஜாதகர் தன் குடும்பத்தோடு தானும் விபத்தில் மரணம் அடைந்துள்ளார்.

அடுத்து கூட்டு மரணம் எப்போது நடைபெறும் எனப் பார்ப்போம். ஒருவருடைய ஜாதகத்தில் குருவும் ராகுவும் மேற்கண்டபடி எந்த திரிகோணத்தில் இணைந்து நிற்கிறார்களோ அந்த திரிகோணத்திற்கு கோச்சார குருவும் ராகுவும் வரும் காலத்தில் ஜாதகர் மரணம் அடைய வாய்ப்பு உண்டு.உதாரண ஜாதகத்தில் குருவும் ராகுவும் மிதுன ராசிக்கு திரிகோணத்தில் நிற்கிறார்கள். ஜாதகர் விபத்தில் இறந்தபோது கோச்சாரத்தின் குருவும் ராகுவும் இணைந்து மிதுன ராசியில் சஞ்சரித்தார்கள்(செப்டம்பர் 2001)

மேற்கண்ட விளக்கங்களிலிருந்து ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ளலாம் அதாவது கூட்டு மரண தோஷத்தால் இறப்பவர் அனைவரும் ஒரே நாளில் பிறந்தவர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, ஒரே லக்னத்தில் பிறந்தவர்களாகவோ, ஒரே ஜென்ம ராசியை கொண்டவர்களாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களுடைய ஜாதகத்தில் கூட்டு மரண தோஷம் இருந்தால் போதும்.

கூட்டு மரண தோஷம் உள்ளவர்கள் மரணம் ஏற்படும் காலத்தை கிரக கோச்சார நிலைகளை கொண்டு அறிந்து கொள்ளலாம். அவ்வாறு அறிந்து கொண்டு அக்காலங்களில் குடும்பத்தாரோடு கூட்டமாக பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். பொதுக்கூட்டங்கள், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் இவைகளில் கலந்து கொள்ளக் கூடாது.

16.07.2004 அன்று கும்பகோணத்தில் பள்ளி குழந்தைகள் ஏறத்தாழ 100 பேர் தீ விபத்தில் சிக்கி உடல் கருகி இறந்து போனார்கள் அன்றைய தின கிரக நிலைகள் கீழே தரப்பட்டுள்ளன

மேற்கண்ட தினத்தில் கோச்சாரத்தில் குரு சிம்மத்திலும் அதற்கு திரிகோண ராசியான மேஷத்தில் ராகுவும் அமர்ந்துள்ளனர். குருவும் ராகுவும் ஒன்றுக்கொன்று திரிகோணமாக நிற்பது ‘கூட்டு மரண தோஷம்’ என்றாலும் அது ஏன் கும்பகோணத்தில் ஏற்பட வேண்டும் என கேள்வி எழலாம்? அதற்கான விளக்கம் கீழே தரப்பட்டுள்ளது..

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மகாமக திருவிழா குரு சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் கும்பகோணத்தில் கொண்டாடப்படுகிறது. இதன் மூலம் கும்பகோணத்திற்கும், சிம்ம ராசிக்கும் ஒரு தொடர்பு இருப்பதை உணர்ந்து கொள்ளலாம். மேலும் ஜோதிட விதிப்படி ஒரு ஊரில் ஒரு முக்கிய நிகழ்ச்சி நடைபெறும் போது சூரியன் கோச்சாரத்தில் எந்த ராசியில் நிற்கிறாரோ அதற்கு நேர் ஏழாவது ராசி அந்த ஊரை குறிக்கும்.

கும்பகோணத்தில் மகாமக திருவிழா மாசி மாதம் கொண்டாடப்படுகிறது. மாசி மாதம் சூரியன் கும்ப ராசியில் நிற்பான். கும்ப ராசிக்கு நேர் ஏழாவது ராசி சிம்ம ராசியாகும் எனவே கும்பகோணத்தை குறிக்கும் ராசி சிம்ம ராசி. கும்பகோணம் பள்ளியில் தீ விபத்து ஏற்படுவதற்கு முன் ஜூன் 2004 திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஒரு திருமண மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டு அதில் பலர் உடல் கருகி இறந்து போனார்கள்..

கூட்டு மரண தோஷம்
ஸ்ரீரங்கம் தீ விபத்து

08.06.1997 தஞ்சை பெரிய கோயிலில் கும்பாபிஷேக நாளன்று தீ விபத்து ஏற்பட்டு பலர் உடல் கருகி இறந்து போனார்கள் அன்றைய தினத்தின் கோச்சாரத்தில் நின்ற கிரக நிலைகள் கீழே தரப்பட்டுள்ளன..

மேற்கண்ட தினத்தில் கோச்சாரத்தில் ராகு, குரு, செவ்வாய்,சூரியன், புதன் ஆகிய ஐந்து கிரகங்களும் ஒன்றுக்கொன்று திரிகோணமாக அதாவது கன்னி ராசிக்கு திரிகோணத்தில் இருப்பதை காணலாம்.. தஞ்சாவூரின் பசுமையான பகுதிகளை குறிக்கும் ராசி கன்னியாகும். கன்னி ராசிக்கு திரிகோணத்தில் மேற்கண்ட கிரக அமைப்பு இருப்பதால் தஞ்சை கோயிலில் மேற்கண்ட தீ விபத்து ஏற்பட்டு பலர் இறந்து போயினர்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular