குரோதி வருட பலன்கள் 2024- மேஷம்
இந்தப் புது வருடத்தில் மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். எனவே இந்த வருடம் மேஷ ராசியினர் நினைத்த அனைத்தும் அழகாக நிறைவேறிவிடும். எண்ணியவை எல்லாம் எண்ணியவாறு ஈடேறும் என்று ஆசீர்வதிப்பார்களே! அதுபோல் அனைத்தும் கைகூடிவரும். இதில் ஒன்றை சொல்லியே ஆக வேண்டும். நினைப்பதை நல்ல செயலாக நினையுங்கள். ஏனெனில் கொஞ்சம் கோக்குமாக்கு யோசனை எட்டிப் பார்க்கும்.
இந்த புது வருடம் மேஷ ராசியினருக்கு மிக மேன்மையான பண வரவு தரும். உங்களில் அநேகம் பேர் வெளிநாடு பணப்புழக்கம் பெறுவீர்கள். சிலருக்கு வீடு, மனை விற்ற பணம் கிடைக்கும். சிலருக்கு வழக்கில் வெற்றி பெற்று அவை சார்ந்த தொகை கிடைக்கும். இதில் கவனிக்கத்தக்க ஒன்று உண்டு. பண வரவு அதிகமாக இருந்தாலும், செலவும் மிக அதிகமாகவே வரும். எனவே வரும் தொகையை கையில் வைத்திருக்காமல் உடனே முதலீடு செய்து விடுங்கள்.
குரோதி வருட கிரக நிலைகள்
ராசியில் சூரியன் குரு,3ல் சந்திரன் ,6ல் கேது ,11ல் செவ்வாய் சனி ,12ல் புதன் சுக்கிரன், ராகு |
உங்கள் சொற்களில் இனிமையும், கண்டிப்பும், சற்று குதர்க்கமும் கலந்து இருக்கும். எனவே வார்த்தைகளில் கண்ட்ரோல் தேவைஉங்கள் சகோதரனால் நிறைய வேண்டாத செலவுகள் உண்டு.யாரிடமாவது சண்டையிட்டு வீண் தண்டம் அழவேண்டி இருக்கும் அல்லது வேலைக்கு போகிறேன் என டெபாசிட் பணம் கட்டி ஏமாந்து போகக்கூடும்.
உங்களில் சிலர் புது வீட்டுக்கு பணம் கட்டுவீர்கள். சிலர் பழைய வீட்டை விட்டு அடுக்குமாடி குடியிருப்பு செல்வீர்கள். சிலரின் வீடு, மனை மேல் இருந்த வழக்கு முடிவுக்கு வந்து நன்மை தரும். உங்களில் சிலர் புதுவிதமாக மாடலாக வீடு கட்டுகிறோம் என்று கிறுக்குத்தனமாக எதையாவது செய்து கொண்டிருப்பீர்கள. வாகன யோகம், மனை ,வயல் யோகம் உண்டு. உங்கள் தாயார் வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். ஆரம்பக் கல்வி மாணவர்கள் பள்ளி மாறக்கூடும். மீனவர்கள் வெளிநாடு சென்று மீன் பிடிப்பர்.
இந்த வருடம் அடிக்கடி அனைத்தையும் மறந்து விடுவீர்கள். அல்லது ரொம்ப சந்தேகப்படுவீர்கள். சிலருக்கு பாதத்தில் நரம்பு சுருட்டிக் கொள்ளும். சிலர் நடப்பதற்கு சற்று சிரமமாக இருப்பதாக உணர்வீர்கள். கழுத்தில் நீர் கோர்த்து வீங்கியது போல் இருக்கும். அடிக்கடி வாயு பிரியும் அவஸ்தை ஏற்படும்.
இந்த வருடம் வேலை தேடுவோர் ஒரு சிலருக்கு அரசு பணி கிடைக்கும். அதிலும் ஆசிரியர் பணியில் அரசு பணி வாய்ப்பு உண்டு. வேறு சிலருக்கு ஒரு தடை, தாமதத்திற்கு பிறகு வெளியூர், வெளிநாட்டு பணி கிடைக்கும். வேலை கிடைக்க பணம் செலவு இருக்கும். இப்போது உங்கள் மீதுள்ள வழக்குகளில் நிச்சயம் வெற்றி கிடைக்கும். வெற்றியின் பயன் சற்று ஊசலாட்டத்திற்கு பின் கைக்கு கிடைக்கும்.
இந்த புது வருடத்தில் திருமணம் ஆகாதவர்களுக்கு கண்டிப்பாக கல்யாணம் நடந்துவிடும். திருமணத்தில் கட்டுக்கடங்காத செலவுகள் உண்டு. சிலருக்கு வெளியூர் வெளிநாட்டு வரன் அமைவார்கள்.
வியாபாரம் சம்பந்தமாக வெகு பயணம் வரும். சிலர் புதிதாக வணிகத்தில் முதலீடு செய்வர். சிலர் சினிமா விநியோகஸ்தராக மாறுவர். எந்த வியாபாரம் ஆரம்பித்தாலும் அதில் அலைச்சல் அதிகமாக இருக்கும். தொழில் புரிவோர் சற்று கவனமாக இருக்க வேண்டும். உங்களின் தொழிலின் மேன்மை செழிப்பை உணரும் சில அரசியல்வாதிகளும், சில பல ரவுடிகளும் எங்களுக்கும் பங்கு கொடுத்தால் தான் ஆச்சு என அடம்பிடிப்பர். இதனால் லாபத்தின் அளவு உங்களுக்கு குறைவாக கிடைக்கும் நிலை உருவாகும். எனவே இந்த வருடம் தொழில்நிலை சிறப்பை வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது.
ஆக மேஷ ராசியினருக்கு இந்த குரோதி வருடம் மிக நன்மைகள் தரப்போகிறது உங்கள் உயர்வை பொறுக்க முடியாமல் சில பல இடையூறுகள் வரும் தான். அதனால் அதனையும் சமாளித்து விடலாம். செலவும் நிறைய இருக்கும். கொஞ்சம் கவனமாக இருங்கள் மற்றபடி எல்லாம் ஓகே தான்!!
பலன் தரும் பரிகாரம்
ஒருமுறை சூரியனார் கோவில் சென்று வணங்கவும். வீரபத்திரரை விளக்கேற்றி வணங்குவது நல்லது. மருதமலை முருகனை வழிபடவும்.
சனி செவ்வாய் சேர்க்க இருப்பதால் பைரவருக்கு செவ்வாய்க்கிழமையில் செவ்வரளி பூ, சாம்பார் சாதம் இவற்றோடு மண் அகல் விளக்கில், இலுப்பை எண்ணெய் ஊற்றி, 27 மிளகு மூட்டை கட்டி, சிகப்பு நிற திரியில் விளக்கேற்றி வணங்கவும். மேலும் திருமணமான புது தம்பதிகளுக்கு படுக்கை, தலையணை, மெத்தை என உங்களுக்கு முடிந்த உதவிகளை தேவையறிந்து செய்யவும்.