சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள் 2023-சிம்மம்
ஸ்ரீ மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 1-ம் தேதி(14.04.2023) வெள்ளிக்கிழமை, சூரிய உதயாதி 22-25 நாழிகை அளவில் பகல் 2:59 மணிக்கு சிம்ம லக்னம், கடக நவாம்சத்தில் சூரிய பகவான் மேஷ ராசியில் பிரவேசிக்கும் காலம் மங்களகரமான சோபகிருது வருடம் பிறக்கிறது.
சூரிய பகவானின் அருள் பெற்ற சிம்மராசி அன்பர்களே!!! சித்திரை மாதம் 8-ம் தேதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார்.
வருடம் முழுவதும் சனிபகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார்.
ராகு மற்றும் கேதுக்கள் முறையே ஐப்பசி 13-ம் தேதி வரை 9 மற்றும் 3-ம் இடங்களிலும், பிறகு 8 மற்றும் 2-ம் இடங்களிலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.
இதனால் இந்த வருடம் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். திருஷ்டி மிகவும் அதிகமாக இருக்கிறது. உங்கள் செயல்பாடுகள் முன்னேற்றங்களை வெளியில் தெரிவித்தால் காரியத்தடை உண்டாகும். திருமணம் முடிவான உடனே விரைவில் திருமணம் நடத்த வேண்டும். காலதாமதம் செய்தால் திருமணம் தடைப்படும்.
வீடு, மனை, வாங்கும் யோகம் உண்டு. கணவன் மனைவிக்குள் அடிக்கடி உரசல்கள் ஏற்பட்டு பிறகு சரியாகும். வெகு காலம் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு மருத்துவ உதவியின் பெயரில் குழந்தை பாக்கியம் உண்டாகும். கர்ப்பிணி பெண்கள் வெளியூர் செல்வதை தவிர்க்கவும்.
ஐப்பசி மாதம் 13-ம் தேதிக்கு பிறகு உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை தேவை. ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு உண்டாகும். குடியிருக்கும் வீடு மாற வேண்டி இருக்கும். கூட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் தனி குடித்தனம் செல்ல வேண்டி இருக்கும். மாணவர்கள் தனியாக படித்தால் நல்ல மதிப்பெண் பெறுவர். பிறருடன் கூட்டாக உட்கார்ந்து படித்தால் மதிப்பெண்கள் குறையும்.
பலன் தரும் பரிகாரம்
வாரம் தோறும் சனிக்கிழமை சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமும், ஆஞ்சநேயருக்கு நெய் தீபமும், புதன்கிழமைகளில் விநாயகருக்கு நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபட்டு வர திருஷ்டி தோஷங்கள் பிரச்சனைகள் தீரும்.