திவ்ய தேசம் 55:திருப்பவள வண்ணம்
திவ்ய தேசங்களில் சோழ நாட்டிற்கு இணையாக தொண்டை மண்டலமான காஞ்சிபுரம் விளங்கி வந்தது. திருமால் தன் இஷ்டப்படி எல்லாம் நிறம் மாறி பக்தர்களுடன் கண்ணாமூச்சி விளையாடியிருக்கிறார். கார் வண்ணன் என்று பகவானை முன்பு அழைத்து வந்ததுண்டு. ஆனால் காஞ்சிபுரத்து ஸ்தலங்களில் பகவான் பவளவண்ணனாகவும், பச்சை வண்ணனாகவும் கூட மாறி தன் திருவிளையாடல்களை புரிந்திருக்கிறார். உலகமே அவர் திருவாயில் இருந்ததை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் .எனவே நிறங்களிலும் திருமால் மறைந்திருக்கிறார்.
காஞ்சியில் உள்ள ஸ்ரீ திரு ஏகாம்பரநாதர் கோயிலுக்கு நேர் கிழக்கே உள்ளது திருப்ப பவள வண்ணர் திருக்கோவில். இரண்டு ஏக்கர் நிலப்பரப்பளவில் மேல்நோக்கி ஐந்து நிலை ராஜகோபுரம் ஒரு பிரகாரமும் கொண்டு அமைந்திருக்கிற இந்த கோவில்.
மூலவர்: ஸ்ரீ பவளவண்ண பெருமாள் கோவிலில் மேற்கு நோக்கி காட்சி தருகிறார்.
தாயார்: ஸ்ரீ பவளவல்லி தாயார்
விமானம்:பிரவாள விமானம்
தீர்த்தம்: சக்கர தீர்த்தம்
இங்கேயும் பிரம்ம தேவரியின் யாக கதை வருகிறது. பிரம்மதேவனின் யாகத்தை அழிக்க சரஸ்வதி தேவியால் அனுப்பப்பட்ட கொடிய அரக்கர் கூட்டத்தை பிரம்மனின் வேண்டுகோளை ஏற்று திருமால் கடும் கோபத்தோடு போரிட்டார். பின்னர் அவர்களை ஒன்று விடாமல் அழித்தார். இதனால் பகவானது திருமேனியங்கும் ரத்தம் தெறித்து விழுந்தது. அந்த கோலத்தோடு இந்த ஸ்தலத்தில் நின்றதால் பெருமாளுக்கு ஸ்ரீ பவளவண்ணர் என்ற பெயர் ஏற்பட்டது. மூலவர் சிவந்த வடிவம் கொண்டு காட்சி தருகிறார் இதை வேறு எந்த தலத்திலும் காண முடியாது.
அஸ்வினி தேவதைக்கும், பார்வதி தேவிக்கும் நேரடி தரிசனம் கொடுத்திருக்கிறார் என்பது இன்னொரு சிறப்பு. திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார். கோவிலுக்குள் பச்சை வண்ணன் சன்னதி இருக்கிறது. பச்சை வண்ணர் ஆதிசேஷன் மீது வீற்றிருக்கும் காட்சி அற்புதமாக இருக்கிறது .பிருகு மகரிஷிக்கு பகவான் இந்த கோலத்தில் நேரிடை தரிசனம் தந்ததாக புராண வரலாறு உண்டு.
பரிகாரம்
பொறாமை, வயிற்றெரிச்சலால் கெடுதல் செய்பவர்களை தண்டிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள், ராகு-கேது தோஷத்தால் பீடிக்கப்பட்டு எந்த ஒரு முன்னேற்றமும் காணாமல் துடிப்பவர்கள், புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், புத்திரர்கள் இருந்தும் அவர்களால் சுபம் அனுபவிக்க இயலாதவர்கள், வீண்வம்பில் மாட்டிக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கும், கோர்ட்டுக்கும் அலைந்து கொண்டிருப்பவர்கள், விஷப்பூச்சிகளால் கடிபட்டு நிறத்தை இழந்து ரத்தம் கெட்டு மீள முடியாதவர்கள் அத்துணை பேர்களும் ஒருமுறை இந்த புனித கோவிலுக்கு வந்து பவளவண்ணரை தரிசித்து தங்கள் குறைகளை எடுத்து சொன்னால் பகவான் விஸ்வரூபம் எடுத்து அத்தனை பேருடைய துன்பங்களை அடியோடு விரட்டுவார் என்பது சத்தியம்.
கோவில் இருப்பிடம் :