திவ்ய தேசம் 56: திருப்பரமேஸ்வர விண்ணகரம் (காஞ்சீபுரம்)
காஞ்சிபுரம் மிகப்பெரிய புண்ணிய ஸ்க்ஷேத்திரம் என்பதை நிரூபிக்கும் பொருட்டு பகவான் பல்வேறு வகையில் பக்தர்களுடைய வேண்டுகோளை ஏற்று அவர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். இதற்கு இன்னொரு நிகழ்ச்சியாக திருப்பரமேஸ்வர விண்ணகரப் பெருமாள் கோயிலைச் சொல்லலாம். பகவானை மனதார பிரார்த்தனை செய்தால் விதியைக் கூட நல்லபடியாக மாற்றலாம் என்பது உண்மை. திருமாலின் இந்த கருணை விண்ணையும் எட்டக்கூடியது என்பதில் துளியும் சந்தேகம் இல்லை
காஞ்சிபுரம், காமாட்சி அம்மன் கோயிலுக்கு நேர் கிழக்கே – சுமார் மூன்று ஏக்கர் நிலப்பரப்பளவில் மேற்கு நோக்கிய மொட்டைக் கோபுரம், இரண்டு பிராகாரங்களைக் கொண்டது இந்தக் கோயிலில்
மூலவர்: ஸ்ரீ பரமபத நாத பெருமாள்.
விமானம்: முகுந்த விமானம்.
தாயார்: வைகுந்தவல்லி.
தீர்த்தம்: அயிரம்ம தீர்த்தம்
கோயிலின் விமானம் மூன்று தளம் கொண்டு அஷ்டாங்க விமானமாக உள்ளது. அடித்தளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த நிலையிலும், மத்தியில் ரெங்கநாதன் மற்றும் திருமகள் பூமாதேவியின் சயனக் கோலத்திலும் மேல் தளத்தில் நின்ற திருக்கோலத்திலும் காட்சி தருகிறார். கோயிலின் மூலவர், சுற்றியுள்ள பிராகாரம் தூண்கள் யாவும் ஒரே கல்லில் குடையப்பட்டிருக்கிறது.
திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார். இராமானுஜர் மணவாள மாமுனிகள் விஜயம் செய்திருக்கின்றனர்.
விதர்ப்ப தேசத்து மன்னன் விரோசனுக்கு புத்திர பாக்கியம் இல்லை. தனக்குப் புத்திர பாக்கியம் வேண்டி காஞ்சிபுரம் கைலாசநாதரை வழிபட்டான். சிவபெருமான் திருவருளால் திருமாலின் துவார பாலகர்கள் விரோசனுக்கு இரண்டு மகன்களாகப் பிறந்தார்கள். பல்லவன், வில்லவன் என்ற அந்த இரு குழந்தைகளும் திருமால் மீது அளவுகடந்த பக்தியால் கைலாசநாதர் கோயிலின் வடக்கு மூலையில் யாகம் நடத்தினர். இவர்களது பக்தியை மெச்சிய திருமால் ஸ்ரீ வைகுண்ட நாதனாக காட்சியளித்தார். என்பது ஸ்தல புராணம்.
பரிகாரம்:
புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் பெறவும் குழந்தைகள் இருந்தும் அவர்களால் அவஸ்தைப்படுபவர்கள் அந்த அவஸ்தையிலிருந்து நீங்கவும், பிறந்த குழந்தைகள் நீண்ட ஆரோக்கியமாகவும் இறை பக்தியோடு நன்னடத்தையாக வாழவும் சூழ்நிலை காரணமாக வெளி தேசத்திற்குச் சென்றால் அங்கு நன்னடத்தைக் கெட்டுப்போகாமல் இருக்கவும் இங்குள்ள கைலாசநாதர் சன்னதிக்கு வந்து சிவபெருமானை வணங்கி, பின் ஸ்ரீ பரமபத பெருமாளை தரிசனம் செய்து துவார-பாலகர்களுக்கும் அர்ச்சனை செய்தால் போதும் தாங்கள் விரும்பிய அனைத்தையும் பகவான் கருணையால் பெற்றுவிடலாம்.
