அருள் தரும் ஆலயங்கள்-ஸ்ரீவைகுண்டம்-சனி தோஷ பரிகார ஸ்தலம்
திருநெல்வேலி-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் 28 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஸ்ரீவைகுண்டம்.
108 திவ்யதேசங்களில் ஒன்றாகவும், ரோமச முனிவர் பூஜிக்கப்பட்ட நவகைலாயத் தலங்களுள் ஒன்றாகவும் சிறப்பிக்கப்படுவது, ஸ்ரீவைகுண்டம்.
பெருமாளின் வாசஸ்தலம் ஸ்ரீவைகுண்டம். சத்திய லோகத்தில் பிரம்மாவிடம் இருந்து சிருஷ்டி ரகசியங்களை எல்லாம்சோமுகாசுரன் என்ற அசுரன் திருடிவிட அதை மீட்பதற்கான வழியை திருமாலிடம் வேண்டி நின்றார் பிரம்மா.
நதிக்கரையில் இருக்கும் இவ்வூரின் சிறப்புகளை கூறி இங்கு தவம் இருந்து தம்மை வழிபடுமாறு கூறினார். அவ்வாறே பிரம்மாவும் செய்ய அகமகிழ்ந்த நாராயணன் தனது இருப்பிடமான வைகுண்டத்தில் இருந்து கிளம்பி வந்து இங்கு எழுந்தருளினார். சோமுகாசுரனை தனது சக்ராயுதத்தால் வதம் செய்து அவனிடமிருந்து சிருஷ்டி ரகசியங்களை மீட்டு பிரம்மாவிடம் ஒப்படைத்தார்.
இவ்வாறாக ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து இங்கு எழுந்தருளி அதே கோலத்தில் எம்பெருமான் சேவை சாதிப்பது இத்தலத்திற்கு ஸ்ரீவைகுண்டம் என்ற பெயர் வந்தது.
ஜீவநதியான தாமிரபரணியின் வடகரையில் இது ஆரம்பத்தில் வைகுந்தம் என்றும், கிபி 11ஆம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழ சதுர்வேதி மங்கலம் என்றும், பிற்காலத்தில் ஸ்ரீ வைகுண்டம் என்றும் அழைக்கப்பட்டது. இத்தளம் சனி தோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது.
கோயில் வளாகத்திலேயே பின்னர் கட்டப்பட்ட காசி விசாலாட்சி, சமேத காசி விஸ்வநாதர் கோயிலும் உள்ளது. இரண்டு திருசுற்றுகள்,இரண்டு சுவாமி சன்னதி, இரண்டு அம்பாள் சன்னதிகள் உள்ளது. முகமண்டப வலப்பக்கம் வீற்றிருக்கும் பூதநாதர் விசேஷமானவர். காவல் தெய்வமான இவர் தர்மசாஸ்தாவின் அம்சம். சித்திரை பெருவிழாவில் சுவாமிக்கு வாகனமாகும் இவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுவது சிறப்பு.
சனி பகவான் தனி சன்னதியில் தரிசனம் தருகிறார் 7 சனிக்கிழமை மாலை வேளையில் இங்கு வந்து சுவாமி, அம்பாளை வணங்கிவிட்டு சனீஸ்வரர் சன்னதியில் 5 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு வர எப்படிப்பட்ட சனி தோஷமும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.
இங்கே அருளும் கைலாயநாதர் மிகவும் ஆற்றல் வாய்ந்த மூர்த்தி என்பதால் இவருக்கு நேர் எதிரே அதாவது கோயிலின் பிரதான கிழக்கு வாசல் எதிரே ஊர் அமையவில்லையாம். இவரது பார்வையின் தீட்சண்யம் நவதிருப்பதி தலங்களில் ஒன்றான நத்தம் விஜயாசனர் திருக்கோயிலை பாதித்ததாம். எனவே சிவனின் உக்கிரத்தைத் தணிப்பதற்காக ஆகாய நரசிம்மர் என்ற மூர்த்தத்தை அந்த பெருமாள் கோயிலின் மேற்குப் பிரகாரத்தில் பிரதிஷ்டை செய்ததாக சொல்லப்படுகிறது.
கைலாயநாதரை வழிபட்டால் இழந்த பரம்பரை சொத்துக்கள் திரும்பக் கிடைக்கும், குடும்பத்தில் ஒற்றுமை பெருகும் என நம்பப்படுகிறது.
சித்திரை முதல் பங்குனி வரை ஆண்டு முழுக்க அரன் திருக்கோயிலுக்கு உரிய அனைத்து திருவிழாக்கள் உற்சவங்கள் அபிஷேக ஆராதனைகள் என யாவும் இங்கே சிறப்புற நடத்தப்படுகின்றன…
மீண்டும் ஒரு அற்புத ஆலயத்தில் சந்திப்போம்
Google Map