அவிட்டம் நட்சத்திரம்
இருபத்தேழு நட்சத்திரங்களில் இருபத்துமூன்றாவது இடத்தைப் பெறுவது அவிட்ட நட்சத்திரமாகும். இதன் அதிபதி செவ்வாய் பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இதில் 1,2-ஆம் பாதங்கள் மகர ராசிக்கும். 3, 4-ஆம் பாதங்கள் கும்பராசிக்கும் சொந்தமானதாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் க, கி, கு, கூ ஆகியவை. தொடர் எழுத்துக்கள் ஞ, ஞா, கே ஆகியவைகளாகும்.
குண அமைப்பு:
அவிட்டம் செவ்வாய் பகவானின் நட்சத்திரம் என்பதால் பல கலைகளையும் கற்றுவைத்திருப்பார்கள்.பிறருடைய முகத்தை நேருக்கு நேர் பார்த்துப்பேசுவார்கள். மெதுவாக நடப்பார்கள், ஆடை ஆபரணங்கள்மீது அதிக விருப்பம் உடையவர்கள். தன்பேச்சாற்றலால் எதிரிகளை ஓட ஓட விரட்டுவார்கள். அழகும் அறிவும் நிறைந்தவர்கள். மற்றவர்களின் சொத்துக்கு ஆசைப்படாதவர்கள். அடுத்தவர் தன்னைப்பற்றி விமர்சனம் செய்தால் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். உலகமே தலைகீழாககவிழ்ந்தாலும் அஞ்சாமல் இருப்பார்கள். அடுத்தவர்களின் உதவியை எதிர்பார்க்க மாட்டார்கள். ஜாதி,இனம், மொழிமீது அதிக பற்றுதல் இருக்கும். மதியாதவர்களின் வாசற்படியை மிதிக்க மாட்டார்கள். வயசண்டைக்கு போகாவிட்டாலும் வந்த சண்டையை விடமாட்டார்கள். அனாவசியமாக பிறருக்கு செலவுவைக்கவும் மாட்டார்கள். தன்னம்பிக்கை அதிகம்உள்ளவர்கள். போராடி வெற்றி பெறக்கூடியவர்கள்.அனுபவ அறிவால் மற்றவர்களுக்கும் வழி காட்டுவார்கள். அவிட்டத்தில் பிறந்தவர்கள் தவிட்டுப் பானையிலும் தங்கம் எடுப்பார்கள். செல்வாக்கும் சேரும்.
குடும்பம்:
அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மனைவி,பிள்ளை மற்றும் பெற்றோர், சகோதரர் என கூட்டாகவாழ்வதில் ஆர்வம் காட்டுவார்கள். குற்றம் செய்பவர்களை தண்டிக்க தயங்காதவர்கள். தாய், தந்தையை ஆயுள்காலம்வரை பேணிக் காப்பார்கள். கோபமிருக்கும் இடத்தில் குணமிருக்கும் என்பதற்கேற்ப குடும்பத்திலுள்ளவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளைத் தவறாமல் செய்வார்கள். உற்றார் உறவினர்களைவிட மற்றவர்கள்மீது அதிக பாசம்இருக்கும். யாரையும் சார்ந்துவாழப் பிடிக்காதவர்கள்.சமூக சீர்திருத்தவாதியாகவும் மூடநம்பிக்கைகளை வேரோடு களைபவர்களாகவும் இருப்பார்கள். பகட்டான வாழ்க்கையும், பஞ்சுமெத்தை உறக்கமும் இவர்களுக்கு பிடிக்காது. இலவசப் பொருட்களை வாங்கமாட்டார்கள். பொய்பேசுபவர்களைக் கண்டால் பொங்கி எழுவார்கள்.
தொழில்:
அவிட்ட நட்சத்திரக்காரர்கள் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் விளங்குவார்கள். பூமிமீது தீராத மோகம் உண்டு. பலர் நாட்டை காக்கும் ராணுவத்தில் அதிகாரிகளாக விளங்குவார்கள். காவல் துறையிலும், சமூகத்தை காக்கும் இயக்கங்களிலும் சேர்ந்து
பணியாற்றுவார்கள். கடின உழைப்பை விரும்புவார்கள். முத்து, பவழம் போன்றவற்றிலும் லாபம் பெறுவார்கள். விளையாட்டுத் துறைகளிலும் அதிக ஆர்வம் இருக்கும். மாநில அளவில் பல பரிசுகளைத் தட்டிச் செல்வார்கள். எதிலும் தனித்து நின்று போராடி
வெற்றிபெறுவார்கள். 22 வயது வாழ்வில் போராட்டங்களை சந்தித்தாலும் 37 வயதிருந்து சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தினைப் பெறுவார்கள். அரசியலும் ஈடுபாடு அதிகமிருக்கும். அடிமைத்தனம், மூடநம்பிக்கை இவற்றிருந்து வெளியேறி வாழ்வில் முன்னேற்றம் அடைவார்கள்.
நோய்கள்:
அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, கை கால்களில் வயும் நரம்புகளில் பிரச்சினையும், இதய சம்பந்தப்பட்ட, ரத்த சம்பந்தப்பட்ட பாதிப்புகளும் ஏற்படும். மயக்கம், தலைசுற்றல், இதயத் துடிப்பு அதிகமாதல் போன்றவற்றாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும்.
தசைப்பலன்கள்:
அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் நட்சத்திராதிபதி என்பதால் முதல் தசையாக வரும் செவ்வாய் தசையின் காலங்கள் 7 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தைக் கணக்கிட்டு மீதமுள்ள தசா புக்திகளை அறியலாம். இந்த காலங்களில் குடும்பத்தில் சுபிட்சமும் பெற்றோருக்கு உயர்வும் உண்டாகும். சிறு வயது என்பதால் உஷ்ண சம்பந்த பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும்.
இரண்டாவதாக வரும் ராகு தசைக் காலங்களில் கல்வியில் சற்று மந்த நிலையும், பிடிவாத குணமும்,
பேச்சில் வேகமும், பெற்றோர் சொல் கேட்காதவர்களாகவும் இருப்பார்கள்.
மூன்றாவதாக வரும் குரு தசைக் காலங்களில் சற்று கல்வியில் உயர்வும் திருமண சுப காரியம் நடைபெறும் அமைப்பும் கொடுக்கும். 16 வருடம் நடைபெறும் குரு தசைக் காலங்கள் ஏற்ற இறக்கம் நிறைந்ததாக இருக்கும்.
நான்காவதாக வரும் சனி தசைக் காலங்களில் பல முன்னேற்றங்கள், பொருளாதார மேன்மைகள் உண்டாகும் என்றாலும், உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகளும் உண்டாகும். வண்டி வாகனங்களால் விபத்துகளை எதிர்கொள்ள நேரிடும். பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. சனி ராசியாதிபதி என்பதால் பெரிய கெடுதல்களைச் செய்யமாட்டார். உடனிருப்பவர்களாலும் தொழிலாளர்களாலும் அனுகூலம் கிட்டும். பழைய இரும்புப் பொருட்களாலும் லாபங்கள் கிடைக்கும்.
விருட்சம்:
அவிட்ட நட்சத்திரக்காரர்களின் ஸ்தல மரம் வன்னி மரமாகும். இம்மரமுள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்வது நல்லது. இந்த நட்சத்திரத்தை செப்டம்பர் மாதத்தில் ரிஷப லக்னம் உதயமாகி அரைநாழிகை சென்று இரவு 11 மணிக்கு வானத்தில் காண முடியும்.
செய்யவேண்டிய நல்ல காரியங்கள்
அவிட்ட நட்சத்திரத்தில் தாக்கு பொன் உருக்குதல், திருமணம், சீமந்தம், உபநயனம், குழந்தைக்கு மொட்டையடித்தல், காது குத்துதல், பெயர் வைத்தல், பள்ளியில் சேர்த்தல் போன்றவற்றை செய்யலாம். மருந்துண்பது, வண்டி வாகனம் வாங்குவது,பயணங்கள் மேற்கொள்வது ஆகியவற்றையும் செய்யலாம்.
வழிபாட்டு ஸ்தலங்கள்
திருவான்மியூர்:
சென்னைக்கு தெற்கில் 8 கி.மீ தொலைவில் உள்ள கடற்கரை ஸ்தலம். வன்மீகர், மருந்தீஸ்வரர், பால்வண்ண நாதர் என்ற பெயர்களுடன் ஈசன் அமைந்த ஸ்தலம். அன்னை திரிபுரசுந்தரி.
திருக்காட்டுப்பள்ளி:
தஞ்சை மாவட்டம், திருவையாற்றுக்கு மேற்கில் 10 கி.மீ தொலைவில் அக்னீஸ்வரர் அருள்புரியும் ஸ்தலம்.
கொடுமுடி:
கொங்கு நாட்டில் பாண்டி கொடுமுடி என்று அழைக்கப்படும் மகுடேஸ்வரர் சௌந்தர நாயகி அருள்பாலிக்கும் ஸ்தலம்.
திருப்பூந்துருத்தி:
திருவையாறுக்கு மேற்கே 5 கி.மீ தொலைவில் புஷ்பவன நாதர், அழகாலமர்ந்த நாயகி அருள்பாலிக்கும் ஸ்தலம்.
கூற வேண்டிய மந்திரம்
ச்ரவிஷ்டா தேவதா; வந்தே
வஸிந் ரதவராஸ்ரிதான்!
சங்கம் சக்ராங்கிதகரான்
க்ரீடோஜ்வல மஸ்தகான் !!
பொருந்தாத நட்சத்திரங்கள்
மிருகசீரிஷம், சித்திரை நட்சத்திரங்கள் பொருந்தாது.