மேஷ லக்னம்
12 ராசிகளில் முதலாவதான மேஷ ராசி கால புருஷனின் தலையைக் குறிக்கும். அக்னி தத்துவத்தை கொண்டதால் அதிக உஷ்ண சக்தியை கொண்டது. நீர் வறண்டது , பிருஷ்டோதய ராசி , சர ராசி, ஆண் ராசி, ஓஜை அல்லது ஒற்றை ராசி என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இரவில் பலம் கொண்டது. ரஜோகுணம் உள்ளது. கிழக்கு திசை குறிக்கும். இதற்கதிபதி செவ்வாய். இந்த ராசியில் அடங்கியுள்ள நட்சத்திரங்கள் அஸ்வினி, பரணி, கிருத்திகை.
பொதுப்பலன்
இந்த லக்னத்தில் பிறந்தவர் மெலிந்த தேகமும், நீண்ட கழுத்தும், மூக்கும், அழகும் உள்ளவன். கம்பீரமான தோற்றம் உள்ளவன். தைரியசாலி, புத்திசாலி, சாமர்த்தியமும், அடக்கமுமுள்ளவன். வாக்கு வன்மை,வாதாடும் திறமையுள்ளவன். வெகுஜனப்ரியன், பிடிவாத குணம் உண்டு. சாஸ்திர பிரியன், முன் கோபி, பரோபகாரி சுயநலனை தியாகம் செய்து பிறருக்கு உதவும் மனம் படைத்தவன். எந்த பொறுப்பையும் ஏற்று எடுத்த காரியத்தை திறம்பட செய்து முடிப்பான். ஆனாலும் அடிக்கடி உணர்ச்சி வசப்படக் கூடியவன்.
நட்சத்திர பலன்
அஸ்வினி
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவன் எடுத்த காரியத்தை அப்பழுக்கின்றி செய்து முடிக்கும் திறமைசாலி, தியாகி, தீரன், பொய் பேச மாட்டான், ஆபரணப்பிரியன், புகழ் உள்ளவன் ஆனாலும் அற்பத்துக்கெல்லாம் கோபித்துக் கொள்வான்.
பரணி
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவன் பெற்றோருக்கு இனியவன், ஞானி, புகழ் உள்ளவன், சாமர்த்தியசாலி, வாக்கு வன்மையுள்ளவன், சயன சுகம் குறைந்தவன்.
கார்த்திகை முதல் பாதம்
கார்த்திகை முதல் பாதத்தில் பிறந்தவன் ஆசாரன், வித்வான், பிரபு, சூரன், புத்திமான் ஆனாலும் ரோகி.
கிரகங்களின் ஆதிபத்திய பலன்
சூரியன்
புத்திரம், பூர்வ புண்ணியம், வித்தை, கர்ப்ப தானம், வித்வான்களின் பிரபந்தம், மந்திர சித்தி, மேதாவிலாசம் ஆகிய காரகங்களை குறிக்கும் முக்கிய இடம் 5மிடம். இதற்கு அதிபதி நவகிரகங்களில் ராஜாவும், லக்னாதிபதி செவ்வாய்க்கு நட்பு கிரகமான சூரியன். அரசாங்கம் அல்லது அதிகாரிகளின் மூலம் ஆதாயம், உத்தியோகம் சம்பந்தப்பட்ட இலாகா, பரிபாஷையில் தேர்ச்சி பெற்று அதிகாரி யாவதும் ஐந்தாம் அதிபதி தரும் நன்மை.
இவர் முழு யோகாதிபதி.இவருடன் சேர்ந்தவரும் நற்பலன்களை அளிப்பார். இவருடன் குருவோ சந்திரனோ சேர்ந்தால் ராஜ யோகம் ஆகும். இவர் லக்னத்தில் உச்சமானால் ஜட்ஜ் அல்லது மாஜிஸ்திரேட் போன்ற அரசாங்க அதிகாரியாக வரலாம். இவர் 9ல் இருந்தால் குலப்பிரசித்தியும் புகழும், பற்பல கிரகங்களை செய்தல், அரசாங்க உத்தியோகம் ஆகிய பலன்களை அளிப்பார்.
புத்திரர்கள் நல்ல படிப்பும், அந்தஸ்து உள்ளவர்களாக பிரகாசிப்பார்கள். 5ம் அதிபதி 10ல் இருந்தாலும் மேலே கூறிய பலன்களை அளிப்பார். 4ல் தாய் சுகம், லட்சுமி கடாட்சம், புகழ், அதிகார பதவி புத்திரவிருத்தி ஆகிய சுபபலன்கள் உண்டு. பொதுவாக ஐந்தாம் அதிபதி ஆனதால் 1,4,7,10ல் இருப்பது நலம். 6,8 ,12 ஆம் இடங்களை தவிர மற்ற இடங்களில் பகை, நீசம் பெறாமல் இருப்பது நலம்.
சந்திரன்
தாயார், வீடு, வாகனம், சுகம், வித்தை, பால், பசு,உறவினர் ஆகியவற்றைக் குறிக்கும். 4ம் இடத்திற்கு மாதுர் காரகன் சந்திரன் அதிபதி. மனதிற்கும்,லக்னாதிபதிக்கும் நட்பான இவர் உணர்ச்சிவசமாகுதலுக்கும் காரகர். கிரகங்களில் ராணியாக கருதப்படும் இவர் 4ல் ஆட்சியாவதால் ‘கரோகபாவ நாஸ்தி’ என்ற தோஷம் அவ்வளவாக பாதிக்காது. நல்ல படிப்பு, அரசாங்க உத்தியோகம், கப்பல் பொறியாளராகும் தகுதி, ரசாயனம், ஆராய்ச்சி செய்தல் இவர் 10லிருந்து அளிக்கும் பலன்கள். 6, 8, 12ல் மறையாமலும் பகை நீசம் பெறாமலும் வலுக்க வேண்டும். 1,2,4,5,9,10ல் இருப்பது நலம்.
செவ்வாய்
எட்டுக்குடையவனே லக்னாதிபதியானால் முழுச்சுபனே என்ற விதிப்படி லக்னம் எட்டு ஆகிய இரண்டு இடங்களுக்கும் அதிபதியான செவ்வாய் முழு சுபராவார். சேனாதிபதியான செவ்வாய் லக்னத்தில் ஆட்சி பெற்றால் அல்லது பத்தில் உச்சம் பெற்றால் விலகாத லட்சுமி கடாட்சம், இன்ஜினியரிங், விஞ்ஞானம், சட்டம் ஆகிய துறைகள் சம்பந்தப்பட்ட படிப்பும், உத்தியோகமும் அமையும். தைரியம், சுறுசுறுப்பு, எதிலும் தீவிரமாக செயல்படல், பிறரை அடக்கி ஆளும் திறமை ஆகிய குணங்களை அளிப்பார்.
8ல் ஆட்சியானால் தீர்க்க ஆயுள், அயல் நாட்டு பயணம், ஆராய்ச்சி செய்தல் ஆகிய பலன்கள் உண்டு.1,2,5,6,10,11 ஆகிய இடங்களில் இருப்பது மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு நன்மை தரும். இவர் வலுக்க வேண்டும். கெட்டால் ஆயுல் தோஷம், ஹிரண்யா, விரைவாதம், மூலம், காசநோய் போன்ற கெடுபலன்கள் நேரிடும். இவர் 4ல் நீசம் பெறுகிறார். ஆனால் உச்சகுரு சேர்ந்தால் நீசம் ஒழிந்து யோகத்தை அளிப்பார்.
புதன்
3,6 ஆகிய இரண்டு அசுபஸ்தானங்களுக்கும் அதிபதியான புதன் மேஷ லக்னத்திற்கு முழு பாவியாகிறார். லக்னாதிபதிக்கு சத்ரு 3ம் இடம் தன்னிச்சையாக செயல்படல், தைரியம், எழுத்தாற்றல், விமான பயணம், பாதுகாப்பு,செய்தி தொடர்பு ஆகியவை சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரிதல் ஆகியவைகளை குறிக்கும். இவர் மூன்றாம் இடத்தில் ஆட்சி பெறுவது உத்தமம்.6ம் இடம் ரணரூன ரோகத்தை குறிப்பதால் இவர் வலுத்தால் பொருளாதாரம் கெடும். இவர் எவ்வளவு கெடுகிறாரோ அவ்வளவுக்கு அவ்வளவு பொருளாதாரம் நன்றாக இருக்கும். அதே சமயம் மூன்றாம் இடத்து பலன்கள் கெடும். 1,3,5,9,10ல் இருப்பது நலம். 11-ல் இருப்பது நல்லதல்ல.6க்குடையவர் இரண்டில் இருந்தால் ஆசிரியராகவோ பேராசிரியராகவோ ஆகலாம் .
குரு
9, 12 ஆகிய இரண்டு இடங்களுக்கும் லக்னாதிபதிக்கு மித்ருவான குரு அதிபதி. 9ம் இடம் வலுத்த கோணமானதால் ஒன்பதாம் இடத்தாதிபத்தியம் 12ம் இட ஆதிபத்திய தோஷத்தை போக்கி குருவை பூரண ராஜயோக கிரகமாக்குகிறது.
9மிடம் பிதா, பிதூர் பாக்கியம், பக்தி தர்மம், புண்ணியம் செய்தல், செல்வம் ஆகிய சுப பலன்களை குறிப்பதால் இவர் வலுக்க வேண்டும். வலுத்த குரு புகழ், பதவி, வருமானம், வீடு வாகனம் என்று எல்லா நன்மைகளையும் அளித்து வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் அந்தஸ்தையும் அளிப்பார்.
12-ஆம் இடம் மோட்சம், சயன சுகம், வெளிநாட்டு உத்தியோகம், விரையம் ஆகிய பலன்களை குறிப்பதால் மூல திரிகோண ஸ்தானமான தனுசை ஒன்பதாம் இடமாக கொண்ட குரு இந்த லக்னக்காரர்களுக்கு ஒரு கற்பக விருட்சமாக கை கொடுத்து உதவுவார். இவர் 1,4,5,7,9, 10 ஆகிய இடங்களில் இருப்பது நன்மை அளிக்கும்.6ல் இருந்தால் ஜீவன, தனஸ்தானங்களையும், 8ல் இருந்தால் தன,சுப ஸ்தானங்களையும், 12 இருந்தால் சுக ,ஆயுள் ஸ்தானங்களையும் தமது பார்வை விசேஷத்தால் விளங்க வைப்பார். இவர் 10ல் இருந்தால் மாரகம் செய்யும் தன்மையையும் பெறுவார்.
சுக்கிரன்
2,7 ஆகிய இடங்களுக்கு சுக்கிரன் அதிபதி. சர லக்னமான மேஷத்திற்கு இரண்டு இடங்களும் மாரக ஸ்தானம் ஆவதால் பாவியாகிறார். மேலும் ஏழாம் இட ஆதிபத்தியத்தால் கேந்திராதிபத்திய தோஷமும் கூடுகிறது. ஆனால் இரண்டு இடங்களும் முக்கியமான இடங்களாகின்றன.
2ம் இடம் குடும்பம், தனம், கல்வி, வாக்கு, வலது கண், உணவு, கௌரவம் ஆகியவற்றையும், 7ம் இடம் மனைவி, வீரியம், வியாபாரம்,கூட்டாளி ஆகியவற்றையும் குறிக்கின்றன. ஆகையால் இவர் சுப பலம் பெற வேண்டும்.
“கெட்டவன் கெட்டிடில் கிட்டியது ராஜயோகம்” என்ற கூற்றின்படி இவர் 6,8, 12 இல் மறைந்தால் நன்மை அளிப்பார் என்று பல மேதைகள் சொல்லியுள்ளனர். இவர் 2ல் செவ்வாய் குருவுடனும் ,4ல் சந்திரனுடனும், 9ல் குரு அல்லது செவ்வாயுடனும், சூரியனுடனும் லக்னத்திலும், சூரியன் புதனுடன் 11லும் இருப்பது நற்பலன்களை அளிக்கும். இவர் 12ல் உச்சமாக அமைந்தால் யோக பலன். கேந்திரத்தில் மட்டும் இருக்கக்கூடாது. இந்த லக்னக்காரர்களுக்கு அமையும் மனைவி இவர்களைவிட எல்லா அம்சங்களிலும் உயர்ந்தவளாகவோ அல்லது சமமாகவோ இருப்பாள் மனைவியால் அதிர்ஷ்டம் உண்டு.
சனி
10 ,11 ஆகிய இடங்களுக்கும் சனியே அதிபதியாகிறார். பத்தாமிடம் தொழில் அல்லது உத்தியோகம், அதிகார பதவி, மெய்ஞானம், பூஜை, தெய்வ பக்தி, பிரதாபம், தகப்பனாரின் பாவத்தை களைதல் ஆகியவற்றையும், பதினோராம் இடம் மூத்த சகோதரன், லாபம், ஆடை, ஆபரணச் சேர்க்கை, அறிவு, வேலையாட்கள், இளைய மனைவி ஆகியவற்றை குறிக்கின்றன.
வலுத்த தசம கேந்திராதிபதியானாலும் சர லக்கினத்திற்கு பாதக ஸ்தானமான 11ம் இட ஆதிபத்தியம் பெறுவதால் பாவி ஆகிறார். ஆனால் பாதகாதிபத்தியத்தினால் ஆரோக்கியம் பாதிக்கப்படுமே தவிர லாபம் பாதிக்கப்படாது என்பது பல மேதைகளின் கருத்து. பாதகாதிபதியான கிரகம் கோணத்தில் இருந்தால் பாதகாதிபத்திய தோஷம் நீங்கி சுபனாக மாறுகிறார் என்று புலிப்பாணி கூறுகிறது.இது எல்லா லக்னங்களுக்கும் பொருந்தும். ஆகையால் சனி 9 அல்லது 5ல் இருந்தால் பாதகாதிபதி பலன் ஏற்படாது.
10ம் அதிபதியாவதால் அவருடைய காரகத்திற்கேற்ப தொழில அமையும். பாட்டாளியின் சின்னமானதால் பெரும்பாலும் மாதச் சம்பளத்திற்கு வேலைக்கு செல்லும் நிலையே அமையும். இரும்பு, உரம், கரும்பு, தானியங்கள்,எண்ணெய், கிழங்கு, பழைய இரும்பு பாகங்கள்,சாமான்கள், எந்திரங்களின் உதிரி பாகங்கள் போன்றவற்றில் வியாபாரம் ஏற்றது. மோட்டார், விமானம், கப்பல், சம்பந்தப்பட்ட இன்ஜினியரிங் படிப்புக்கு வாய்ப்பு உண்டு. அரசியலிலும் ஈடுபடுத்துவார்.
சனி சூரியனுடனும் ராகுடனும் சேர்ந்து இரண்டு அல்லது இரண்டாம் அதிபதியுடன் சம்பந்தப்பட்டால் மருத்துவருக்கு படிக்கலாம். இவரை கிங்மேக்கர் என்று சொல்லுவதுண்டு. 10 அல்லது 11 இல் அமர்ந்து சுப பலம் பெற்றால் குப்பை மேட்டில் இருப்பவனை திடீரென்று கோபுரத்தின் உச்சியில் தூக்கி வைப்பார். அதாவது பரமஏழைக் குடும்பத்தில் பிறந்தவனாக இருந்தாலும் மிக உயர்ந்த பதவியைப் பெறச் செய்வார். ஆனால் திடீரென்று அடி பாதாளத்தில் தள்ளுவதும் இவருடைய இயல்பு. பத்தாம் இடமான மகரத்தையும் சந்திரன் இருக்கும் வீட்டிற்கு 10-ஆம் இடத்தையும் சனியின் நவாம்சதிபதியையும் கொண்டு இன்ன தொழில் என்று தெரிந்து கொள்ளலாம்.
சுபர் அசுபர் விளக்கம்
சுபர்கள்: சூரியன், செவ்வாய், குரு
யோகாதிபதி : சூரியன், சந்திரன்,
குரு (அரைச்சுபர்), சனி (அரைச்சுபர்),
பாபி:
புதன், சுக்கிரன், சனி ( அரை பாபி)
மாரகர்:
புதன், சனி, சுக்கிரன், குரு
முக்கிய நிகழ்ச்சிகளும் காலமும்
கீழே தரும் விவரங்கள் அனுபவத்திலும் சில நூல்களில் இருந்தும் கண்டவை ஜோதிட பெருமக்களின் ஆராய்ச்சிக்குரியவை…
தாயாருக்கு கண்டம் நேரும் காலம்
ராகு தசையில் – ராகு, சனி, சுக்கிர புத்திகள்
சூரிய தசையில் – ராகு, குரு, சுக்கிர புத்திகள்
ராகு-கேது தசையில் – சனி, புதன், சுக்கிர புத்திகள்
செவ்வாய் தசையில் – செவ்வாய், குரு, சுக்கிர புத்திகள்
மேற்படி தசா புத்திகளில் தாயாருக்கு கண்டமோ பிணிகளோ மரணமோ ஏற்படலாம்
தகப்பனாருக்கு கண்டம் நேரும் காலம்
சூரிய தசை – குரு, சனி, புதன் புத்திகள்
ராகு தசை – ராகு ,சனி, சுக்கிர புத்திகள்
சனி தசை – புதன், சுக்கிரன், குரு புத்திகள்
புதன் தசை – புதன், செவ்வாய், சனி புத்திகள்
கேது தசை – செவ்வாய், சனி, புதன் புத்திகள்
மேற்படி தசா புத்திகளில் தந்தைக்கு கண்டாதி பிணிகளோ, கஷ்ட நஷ்டங்களோ, மரணமோ ஏற்படலாம்.
உடன் பிறந்தவர்களுக்கு கண்டம் நேரும் காலம்
குருதசை – செவ்வாய், சனி, ராகு, கேது புத்திகள்
புதன் தசை – செவ்வாய், சனி, ராகு, கேது புத்திகள்
ராகு தசை – செவ்வாய், சனி, ராகு,கேது புத்திகள்
மேற்படி தசா புத்திகளில் சகோதரருடன் கருத்து வேறுபாடு, சகோதரரால் கஷ்ட நஷ்டமோ அல்லது சகோதரர்களுக்கு கஷ்ட நஷ்டமோ, கண்டாதி பிணிகளோ மரணமோ ஏற்படலாம்.
திருமணம் நடைபெறும் காலம்
குருதசை- சனி, சூரியன், சுக்கிரன், சந்திரன் புத்திகள்
சனி திசை -சுக்கிரன், சூரியன், சந்திரன் குரு புத்திகள்
சூரியதசை- சந்திரன், குரு, சனி, சுக்கிர புத்திகள்
சந்திர தசை -குரு, சனி, சுக்கிரன், சூரியன் புத்திகள்
மேற்படி தசா புத்தி காலங்களிலும் ஆண் பெண் இருபாலருக்கும் திருமணம் நடக்கும் மேலும் எல்லா லக்னத்தாருக்கும் 2,7,8,12ம் வீடுகள் திருமணத்துடன் சம்பந்தப்பட்ட இடங்கள் அதாவது குடும்பம்,களத்திரம், மாங்கல்யம், சயன சுகபோகம் ஆகிய இடங்கள் மேற்படி இடங்களுக்கு உடையவர்கள் அல்லது மேற்படி இடங்களில் உள்ளவர்களின் தசா புத்தி காலங்கள் உகந்த காலங்கள். அனுபவத்தில் ஒருவருக்கு ராகு தசையில் புதன் புத்தியோ, புதன் தசையில் ராகு புத்தியோ நடக்கும் பொழுது திருமணம் நடப்பதை பார்க்கிறேன்.
மனைவிக்கு கண்டம் ஏற்படும் காலம்
குருதசை – சனி, கேது, செவ்வாய், ராகு புத்திகள்
ராகு தசை – குரு ,சனி ,கேது, சுக்ர புத்திகள்
புதன் தசை – கேது, செவ்வாய், ராகு, சனி புத்திகள்
மேற்படி தசா புத்திகளில் மனைவி அல்லது கணவனுக்கு கஷ்ட நஷ்டங்களோ கண்டாதி பிணிகளோ, மரணமோ ஏற்படலாம். மேற்படி தசா புத்திகளில் திருமணம் நடந்து தோஷங்களும் ஏற்படுவதை பார்த்து உள்ளேன். ஆகையால் மேற்படி தோஷ காலங்களில் திருமணம் நடக்கவில்லை என்றால் மகிழ்ச்சி.
சூரியன், புதன், ராகு மூவரும் சேர்ந்து ரிஷபம்,துலாம், கும்பம் ஆகிய இடங்களில் எங்காவது இருந்தால் திருமணம் நடப்பது சந்தேகம். அப்படி நடந்தாலும் உடலுறவு ஏற்படுமா என்பது கேள்விக்குறியே..
புத்திர பாக்கியம்
குருதசை – சனி, சூரியன், சந்திரன் புத்திகள்
சனி திசை – சுக்கிரன், சூரியன், சந்திரன், குரு புத்திகள்
சூரியன் தசை – சந்திரன், குரு, சனி, சுக்கிரன் புக்திகள்
சந்திரன் தசை – குரு, சனி, சுக்கிரன், சூரியன் புத்திகள்
மேற்படி தசா புத்திகளில் குழந்தை பிறந்தாலோ அல்லது புத்திரர்களுக்கோ சுப பலன்களே நிகழும்.
குழந்தைகளுக்கு கண்டம் நேரும் காலம்
குருதசை – சனி, கேது, செவ்வாய்,ராகு புத்திகள்
ராகு தசை -குரு, சனி, கேது, செவ்வாய் புத்திகள்
புதன் தசை – கேது ,செவ்வாய், ராகு, சனி புத்திகள்
மேற்படி காலங்களில் புத்திரர்களுக்கு கஷ்ட நஷ்டமோ ,கண்டாதி பிணிகளோ, மரணமோ நேரிடலாம்.
யோக காலங்கள்
சூரியன் தசை – சந்திரன், செவ்வாய், குரு, சனி, சுக்கிரன் புத்திகள்
சந்திரன் தசா – சந்திரன், குரு, சுக்கிரன், சனி புத்திகள்
ராகு தசா – குரு ,சுக்கிரன், சூரியன், சந்திரன், செவ்வாய் புத்திகள்
குருதசா – சுக்கிரன், சூரியன், சந்திரன், செவ்வாய் புத்திகள்
சனி தசா – குரு, சுக்கிரன், சந்திரன் புத்திகள்
சுக்கிரன் தசா – சூரியன், செவ்வாய், குரு, சனி புத்திகள்
மேற்படி காலங்களில் அனுகூலமான பலன்களாக நடக்கும். எந்த பணியையும் ஆரம்பிக்க அனுகூலமான காலங்கள் மேலே கூறியவர்கள் சுபர் சேர்க்கை, சுபர் சாரம், சுப ஸ்தானம் பெற்றால் மிகவும் உத்தமம்.
மரணம் நிகழும் காலம்
- மேஷ லக்னத்தாருக்கு சுக்கிரன், புதன், சனி மூவரும் மாரகாதிபதிகள்…
- சுக்கிரன் 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவதால் மாரகாதிபதி. ஆனால் இரு மாரக ஸ்தானத்திற்கு உடைய கிரகம் மாரகம் செய்ய மாட்டார் என்ற விதிப்படி சுக்கிரன் கொல்லமாட்டார் என்று சந்திர காவியம், தாண்டவமாலை, ஜாதக அலங்காரம் ஆகியவை கூறுகின்றது.
- புதன் 3,6 ஆகிய இரண்டு வீடுகளுக்கும் ஆதிபத்தியம் பெறுவதால் புதனே வலுத்த மாரகாதிபதி..
- பாதகஸ்தானமான 11 வது வீட்டுக் உடையவராவதால் சனி கொல்லக் கூடியவர்.
- 12க்கு உடையவரானதால் குரு பத்தில் இருந்தால் கொல்லுவார்.பத்தில் சுக்கிரனுடன் இருந்தால் ஜாதகரையும்,தாரத்தையும் கொல்லுவார்.
- எட்டுக்குடையவர் ஆவதால் செவ்வாய் சுக்கிரனுடன் சேர்ந்தால் தலையில் அடிபட்டு மரணம் நேரிடும் படி செய்வார்.
- செவ்வாய் புதனுடன் சேர்ந்தால் தலை சம்பந்தப்பட்ட நோய்களினால் மரணம் ஏற்படும்..
- சனி, புதன், சுக்கிரன், மூவரும் ஒன்று சேர்ந்தால் மூவரும் தங்கள் தசையில் மாரகம் செய்வார்கள்.
- புதன், சனி இருவரும் மாரகம் செய்வார்கள் சனியா? புதனா? என்பதை அவர்களின் வலிமையை ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும்.
பொது மாரக விதி
சர லக்கினத்திற்கு 2,7 – குடையவர்கள் மாரகர்.
ஸ்திர லக்னத்திற்கு 3 ,7 குடையவர்கள் மாரகர்.
உபய லக்னத்திற்கு 7 ,12க்கு உடையவர்கள் மாரகர்
மாரக ஸ்தானத்துக்கு உடையவரை விட மாரக ஸ்தானத்தில் இருப்பவர்கள் மாரகம் செய்வதில் வலிமை உடையவர்கள்.
மாரக ஸ்தானத்துக்கு உடையவர்களை விட அவருடன் சேர்ந்தவர்கள் மாரகம் செய்வதில் வலிமை உடையவர்கள்.
மாரகாதிபதியுடன் சேர்ந்தவர் சுபரானாலும் கொல்வார்.
3 ,8 ஆகியவை ஆயுள் ஸ்தானங்கள் இந்த 3,8-குடையவர்களும் மாரகம் செய்வர். இவர்கள் மாரகாதிபதியுடன் சேர்ந்தால் மாரகம் செய்ய வலிமை பெறுகின்றனர்.
ஜாதகத்தில் மிக குறைந்த பலம் உள்ளவர் எவரோ அவரும் கொல்லலாம்.
ஆயுள் காரனாகிய சனி மாரகாதிபதியானால் அல்லது மேலே கூறிய மாரகாதிபதிகளின் சம்பந்தம் பெற்றால் எல்லோரையும் தள்ளித்தானே தன் தசையில் மாரகம் செய்வார்.
இவை எல்லா லக்னங்களுக்கும் பொதுவானவை…
யோகம் தரும் அமைப்புகள்…
சூரியன் சந்திரன் இருவரும் கூடினால் ராஜயோகம்…
லக்னத்தில் சூரியன் உச்சம் பெற்று குருவால் பார்க்கப்பட்டால் யோகம்…
சூரியனும் சுக்கிரனும் கூடி லக்னத்தில் இருக்க குரு பார்க்காவிட்டால் யோகம்..
சூரியன் மேஷத்தில் உச்சமாகவும் சந்திரன் கடகத்தில் ஆட்சியாகவும் இருந்தால் யோகம்..
சூரியன், குரு, சனி, செவ்வாய், ஆகிய நால்வரும் உச்சம் பெற்றால் ராஜயோகம்..
சூரியனுடன் மேலே கூறிய குரு, சனி, செவ்வாய் ஆகியோரில் யாராவது இருவர் உச்சம் பெற்றாலும் ராஜ யோகம்.
குறிப்பு: இது பிருகத் ஜாதகத்தில் சொல்லப்பட்டுள்ளது இது கடகம், துலாம், மகர லக்னங்களுக்கும் பொருந்தும்.
சூரியன் 5ல் ஆட்சி, குரு 9ல் ஆட்சி, செவ்வாய் 10ல் உச்சமானால் ராஜ யோகம்..
சூரியன், செவ்வாய், குரு மூவரும் லக்னத்தில் இருந்தால் ராஜயோகம்..
5ல் சூரியன் ஆட்சி, 4ல் சந்திரன் ஆட்சி, குரு உச்சமானால் ராஜயோகம்..
லக்னத்தில் சூரியன் உச்சம், 9ல் குருவும் சந்திரனும், 10ல் சனியும் ஆனால் ராஜயோகம்..
செவ்வாய் 5ல் இருந்தால் யோகத்தை அளிப்பார்..
செவ்வாய், குரு, சுக்கிரன், சனி நால்வரும் உச்சமானால் ராஜயோகம்.
மேஷத்தில் சூரியன் உச்சம், கடகத்தில் சந்திரன் ஆட்சி ,செவ்வாய் உச்சமானால், அல்லது லக்னத்தில் ஆட்சியானால், அல்லது 5ல் இருக்க யோகம்..
சூரியனுக்கு 1,6, 9 ,12 ஆகிய இடங்களில் எங்காவது சந்திரன் இருந்தால் யோகம்…
செவ்வாய், குரு, சுக்கிரன் மூவரும் 2ல்(ரிஷபம்) இருந்தால் யோகம்.
கடகத்தில் செவ்வாய் நீசம், குரு உச்சம் இருவரும் கடகத்தில் இருந்தால் செவ்வாய் திசை யோக பலனை அளிக்கும்..
சூரியன், புதன் ,சுக்கிரன் மூவரும் கூடி 11ல் இருந்தால் இவர் தசையும் யோகம்..
சுக்கிரன் கடகத்தில் சந்திரனுடன் இருந்தால் யோகம்..
ராகு லக்னம் ,2, 4, 6 ,10 ஆகிய இடங்களில் எங்காவது இருக்க ,ராகுவுக்கு 4,7,10 ஆகிய கேந்திரங்களில் எந்த கிரகம் இருந்தாலும் யோகம்..
லக்னத்தில் சுக்கிரன், 7ல் குரு மனைவி மூலம் யோகம் கிட்டும்..
7 அல்லது 12ல் சுக்கிரன் 2ல் சந்திரன் உச்சம் பெற்றால் யோகம்..