ரிஷப லக்னம்
ராசி மண்டலத்தில் இரண்டாவது ராசி ரிஷபம். ஸ்திர ராசி, நிலதத்துவமானது, கால புருஷனின் முகத்தைக் குறிக்கிறது. கார்த்திகை 2,3 4 வது பாதங்களும், ரோகிணி முழுவதும், மிருகசீரிடம்1,2 பாதங்கள் ஆகிய நட்சத்திரங்கள் அடங்கியுள்ளவை.இது புருஷ்டோதய, பெண், இரட்டை அல்லது யுக்ம ராசியாகும் இந்த ராசிக்கு அதிபதி சுக்கிரன்.
லக்ன பலன்
இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் நடுத்தரமான உயரமும், அழகும், கவர்ச்சியும் உள்ளவர்கள். நல்ல அறிவும், ஞாபக சக்தியும், எண்ணிப் பேசும் சுபாவமும் உள்ளவர்கள். தங்கள் நாவான்மையால் பிறரைக் கவரும் சக்தி படைத்தவர்கள். உண்மைக்கும் நேர்மைக்கும், நியாயத்திற்கும் குரல் கொடுக்கும் தன்னலம் கருதா உபகாரி. ஆனால் தங்கள் கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். எதிரிகளை முறியடித்து சாதனை புரிவார்கள். பொதுவில் நல்ல மனம் படைத்தவர்கள்.
நட்சத்திர பலன்
கார்த்திகை 2, 3 ,4 பாதங்கள்:
கோபி, ஆசாரமில்லாதவன், சூரன்,பொறுமை இல்லாதவன், ரோகி
ரோகிணி:
அதிக நாகம்முள்ளவன், சொன்னால் ஏற்றுக் கொள்வான். புலவன், அன்னதானம் செய்வான், பால்பாக்யம் உள்ளவன்.
மிருகசீரிடம் 1,2 பாதங்கள்:
தனவான், சத்ரு சம்ஹாரன்,துலதேகன், சத்தியவாக்கு உள்ளவன். சாது, நியாயமே பேசுவான்.
பாவாதிபதி பலன்
சூரியன்
இயற்கையில் பாவியான சூரியன் கேந்திரமான 4வது வீட்டுக்கு அதிபதியாக வருவதால் நன்மை செய்யும் சுபராகிறார். இவர் வலுத்தால் பொதுவான வாழ்க்கை வசதிகள், வீடு ,சுகம், வாகனம் ஆகிய நற்பலன்களை அளிப்பார். சூரியன் வலுத்து புதனுடன் கூடி ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, கும்பம் ஆகிய இடங்களில் எங்காவது இருந்தால் உயர்ந்த வீடும், வாகனமும் கிட்டும்.
மாறாக சூரியன் கெட்டால் மனதில் பீதி, குழப்பம், வியாதி, அதிகாரிகளின் அதிருப்தி ஆகிய கெடுபலன்கள் நேரும். சுப பலம் பெற்ற சூரியன் தாயாரின் அன்பும் பாசமும், தாயாரிடம் பரிவும் பாசமும் கொண்டவனாக இருப்பான். தாயார் தீர்க்க வயது உள்ளவளாக இருப்பாள்.
இந்த லக்னத்தாருக்கு அடிப்படை படிப்பு உண்டு. சூரியன் சுப பலம் பெற்றால் பட்டப்படிப்பு உண்டு. எந்த துறையில் பணிபுரிந்தாலும் உத்தியோக உயர்வுக்கு தகுதி பெற பாடுபட்டு வெற்றி பெறுவார்கள் அதற்குத் தேவையான அறிவாற்றல் கொண்டவர்கள். இவர் 1, 3,4,7,9,10,11 இடங்களில் இருப்பது நலம்.
சந்திரன்
சகோதர ஸ்தானமான மூன்றாம் வீட்டுக்குரிய சந்திரன் ரிஷபத்தில் உச்சம் பெற்றாலும், மூன்றாமிடம் ஸ்திர லக்கினத்திற்கு மாரக ஸ்தானமானதால் பாவியாகிறார். இருந்தாலும் மூன்றாமிடம் உபசய ஸ்தானமானதாலும் தைரியம், சகோதரன் ஆகியவற்றின் ஸ்தானமானதாலும் இவர் வலுப்பது நல்லது. சுப பலம் பெற்ற சந்திரன் மிகுந்த தைரியத்தையும்,உடன் பிறப்புகளையும் அளிப்பார்.
கடகம் பெண் ராசியானதாலும், சந்திரன் பெண் கிரகமானதாலும் இவர்களுக்கு சகோதரிகளே அதிகம் பிறப்பார்கள். சகோதரர்களை விட சகோதரிகள் இவரிடம் அன்பும்,ஆதரவும் காட்டுவார்கள்.1, 3, 4, 5, 10 11 ஆகிய இடங்களில் இருந்தால் நன்மை செய்வார்.
செவ்வாய்
களத்திர ஸ்தானமான 7ம் இடத்திற்கும் விரயஸ்தானமாகிய 12ஆம் இடத்துக்கும் உடையவர் செவ்வாய். லக்னாதிபதிக்கு மித்ருவானவர். இவர்களுக்கு வரும் மனைவி பண வசதி படைத்தவளாகவே அதிகம் படித்தவளாகவோ இருப்பாள். ஒன்று மட்டும் உறுதி தன்னைவிட எந்த விதத்திலும் தாழ்ந்தவளாக இருக்க மாட்டாள். செவ்வாய் வலுத்தால் மனைவி கணவனுக்கு கட்டுப்பட்டு ஒற்றுமையாக குடும்பம் நடத்துவாள். ஆனாலும் கோபமும், மூர்க்க குணம் உள்ளவள்.
செவ்வாய் கெட்டால் திருமண வாழ்க்கை சுகப்படாது. அடிக்கடி சண்டை, சச்சரவு தான். பண விரையும் இருந்து கொண்டே இருக்கும். குடும்பத்தில் அமைதியே இருக்காது. வலுத்த செவ்வாய் தொழில் முன்னேற்றம், வியாபார விருத்தி, அயல்நாட்டு உத்தியோகம் ஆகிய நற்பலன்களை அளிப்பார். அரசாங்க ஆதரவு கிடைக்கும்.கேந்திர ஆதிபத்தியம் பெற்ற அசுப கிரகம் சுப பலன்களை அளிப்பார் என்பதால் விரயாதிபத்தியம் பாதிக்காது.
புதன் 2,5 ஆகிய இரண்டு இடங்களுக்கும் அதிபதியான புதன், ஐந்தாமிடம் மூலத் திரிகோண ஸ்தானமாக அமைவதால் சுபராகிறார். கணக்கானாலும் சரி வேறு எந்தத் துறை படிப்பானாலும் சரி பாராட்டும் வகையில் தேர்ச்சி பெறுவார். நல்ல திட்டங்கள் தீட்டி வெற்றிகரமாக முடிப்பார். புத்தகங்கள் எழுதி ஆசிரியராக திகழ்வார். இவர் சூரியனுடன் சேர்ந்து 2, 4 அல்லது 5ல் இருந்தால் பிஎஸ்சி, பிகாம், இன்ஜினியர், ஆடிட்டர் ஆகிய பட்டப் படிப்புகள் விருத்தியுண்டு.
புத்திரர்கள் கவுரவமும், உன்னதமான முன்னேற்றமும் பெற்று விளங்குவார்கள். கருத்தாழத்துடன் அழகாக பேசி பிறரை கவரும் நாவான்மை படைத்தவர்கள். பொருளாதாரம் ஓகே என்று இல்லாவிட்டாலும் பற்றாக்குறை இருக்காது. வேண்டிய பொழுது பண உதவியை சுலபமாக பெறுவார்கள். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியான புதன் கெடக்கூடாது. பொதுவாக 1,2, 4,5,9,10, 11 ஆகிய இடங்களில் இருப்பது நல்லது.
குரு
8, 11 ஆகிய இடங்களுக்குரியவர் குரு. 8ம் இடம் மூலத் திரிகோணமாகவும், மாரக ஸ்தானமாகவும் அமைவதால் பாபிஆகிறார். ஆனால் தனக்காரனான இவரே லாபாதிபதியாய் வருவதால் 1,2,3,5,9,11 ஆகிய இடங்களில் இருந்தால் பொருளாதாரம் நன்றாக இருக்கும்.மேலும் 8மிடம் 10-ஆம் இடத்திற்கு லாப ஸ்தானமாக இருப்பதால் இவர் பத்தாம் அதிபதியுடனோ பத்தாம் இடத்துடனும் சம்பந்தம் பெற்றால் ஒரு இலாகாவுக்கோ, ஸ்தாபனத்துக்கோ தலைமை பதவி வைக்கும் யோகம் உண்டு. ஆயுள் தீர்க்கம் உண்டு.3ல் ஆட்சியானால் சரள யோகம் ஆகும். இவர் புதனுடன் சேர்ந்தாலோ பரிவர்த்தனை ஆனாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலோ தனயோகம் ஆகும்.சூரியன் 9பதுக்குடைய சனிவுடன் கூடி 11ல் இருந்தால் ஆயுள் தீர்க்கம்.பொதுவாக பின் யோகம் அதாவது 40 வயதுக்கு மேல் உண்டு.
சுக்கிரன்
லக்னத்திற்கும், 6-ம் இடத்திற்கும் உடைய சுக்கிரன் பாபியாகிறார்.6-ம் இடம் மூல திரிகோண ஸ்தானமானதால் பாபி என்று கொள்ள வேண்டும். இவர் லக்னாதிபதியானாலும் பாபியே இவர் வலுத்தால் ஆறாம் இடத்துப் பலன்கள் விருத்தி அடையும். அதே சமயம் பொருளாதாரம் கெடும். இவர் சந்திரனுடனோ, சூரியனுடனோ, புதனுடனோ சேர்வது நலம்.
பொதுவாக இவர் திசையில் நல்லது கெட்டது கலந்த பலனையே அளிப்பார். இவர் வலுப்பதை விட பலவீனம் அடைவது நலமே. ரோகஸ்தான ஆதிபத்தியம் பெற்றதால் அடிவயிறு, மர்மஸ்தானம், சம்பந்தப்பட்ட வியாதிகளை கொடுக்கக் கூடியவர். பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறு ஏற்படலாம்.
சனி
9, 10 ஆகிய இரண்டு இடங்களுக்கும் உடையவர். கேந்திர அதிபதியும், கோணதிபத்தியமும் ஒருவருக்கே ஏற்பட்டால் அவரே வலுத்த யோகாதிபதியாவார். ஆனால் ரிஷப லக்னத்திற்கு ஒன்பதுக்கும், பத்துக்கும் உடைய சனிக்கு இது பொருந்தாது. காரணம் ஒன்பதாம் இடம் பாதகஸ்தானம் ஆனதால் பாதகாதிபதியாகிறார். இவர் 10லிருந்தால் நல்லது. 9-ல் இருப்பது நல்லதல்ல.9 பதுக்கு 9பதில் அதாவது 5-ல் இருந்தால் பாதகாதிபத்திய தோஷம் நீங்கி நல்லவராக மாறுவார்.
சுப பலம் பெற்றால் சனி பொருளாதார மேன்மை, பதவி உயர்வு, அரசு அல்லது அதிகாரிகளின் ஆதரவு, தகப்பனாருக்கு மேன்மை ஆகிய நற்பலன்களை அளிப்பார். 9, 10 ஆகிய இரண்டு ஆதிபத்தியமும் சேர்ந்துள்ளதால் இவரால் தகப்பனாருக்கும் தகப்பனாரால் இவருக்கும் நன்மைகள் உண்டு.
சனி 6-ல் உச்சம் பெறுவது ராஜயோகம். 4-ல் இருப்பது பத்தாமிடம் வலுக்கச் செய்யும். தொழில் அமையும். சனியின் காரகத்திற்கேற்ப மேஷ லக்னத்திற்கு உள்ளவர்கள். எந்த தொழிலில் ஈடுபட்டாலும் உழைப்பாலும் திறமையாலும் படிப்படியாக உயர்ந்து நல்ல நிலையையும் அந்தஸ்தையும் பெறுவார்கள்.உழைக்க அஞ்ச மாட்டார்கள்.
சுபர், அசுபர் விளக்கம்
சுபர்: சனி, சூரியன்,புதன்
அசுபர்– குரு, சந்திரன், சுக்கிரன்
யோகாதிபதிகள்– சனி, புதன் இருவரும் அரை சுபர்கள். பொதுவாக ரிஷப லக்னத்திற்கு யோகாதிபதி இல்லை என்பதே பெரும்பாலான நூல்களின் கருத்து.
மாரகர்– சந்திரன் (3-க்குடையவர்), செவ்வாய் (7, 12 க்குடையவர்),புதன்( 2 க்குடையவர்), குரு (8-க்குடையவர்) சுக்கிரன்6 க்குடையவர்.
முக்கிய நிகழ்ச்சிகள் நேரும் காலங்கள்
தாயாருக்கு கண்டங்கள் ஏற்படும் காலம்
சந்திரன் தசை – ராகு, சனி, சுக்கிரன் புத்திகள்
சூரியன் தசை – ராகு, குரு, சுக்கிரன் புத்திகள்
ராகு தசை – சனி, புதன், சுக்கிரன், புத்திகள்
கேது தசா – செவ்வாய், குரு, சுக்ரன் புத்திகள்
மேலே கூறிய தசா புத்திகளில் தாயாருக்கு கண்டாதி பிணிகளோ மாரகமோ நேரலாம்.
தகப்பனாருக்கு கண்டங்கள் நேரும் காலங்கள்
சூரியன் தசை – குரு, சனி, புதன் புத்திகள்
ராகு தசை – ராகு, சனி, சுக்கிரன் புத்திகள்
சனி திசை – புதன், சுக்கிரன், குரு புத்திகள்
புதன் தசை – சூரியன், குரு, சனி புத்திகள்
சந்திரன் தசை – சந்திரன், ராகு, சனி புத்திகள்
மேலே கூறிய தசா புத்தி காலங்களில் தகப்பனாருக்கு கண்டாதி பிணிகள் மாரகமோ அல்லது தகப்பனாரை விட்டு பிரிந்து செல்வதோ நேரலாம்.
சகோதர தோஷம்
செவ்வாய் தசை – ராகு, சனி, சுக்கிரன் புத்திகள்
சந்திரன் தசா – ராகு, சனி, சுக்கிரன் புத்திகள்
குருதசா – ராகு, சனி ,சுக்கிரன் புத்திகள்
புதன் தசா – புதன், செவ்வாய், சனி புத்திகள்
கேது தசா – செவ்வாய், சனி ,புதன் புத்திகள்
மேற்கூறிய காலங்களில் சகோதரர்களுக்கு கண்டாதி பிணிகள் அல்லது மரணத்துக்கு சமமான கண்டங்களோ நேரலாம்.
திருமணம் நடக்கும் காலங்கள்
சனி தசா – சனி, புதன், சந்திரன், குரு புத்திகள்
சந்திரன் தசா – சந்திரன், குரு ,சனி, புதன், சுக்கிரன் புத்திகள்
சூரியன் தசா- சந்திரன், குரு, சனி, புதன், சுக்கிரன் புத்திகள்
புதன் தசா- சந்திரன், குரு,சனி,புதன், சுக்கிரன் புத்திகள்
சுக்கிரன் தசா – சந்திரன், குரு, சனி, புதன், சுக்கிரன் புத்திகள்
ராகு தசா- சந்திரன், குரு, சனி, புதன், சுக்கிரன் புத்திகள்
பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ப தசைகள் ஆரம்பித்து வரிசையாக நடக்கும் திருமண காலத்தில் மேற்படி தசைகள் நடந்தால் குறிப்பிட்டுள்ள புத்திகளில் திருமணம் நடக்கும்
முக்கிய குறிப்பு:
செவ்வாயின் சுக்கிரனும் சேர சனி அல்லது கேது பார்த்தால் திருமணம் நடப்பது சந்தேகமே..
மனைவிக்கு கண்டம் நேரும் காலங்கள்
சந்திரன் தசா- செவ்வாய், ராகு, குரு, சனி, சுக்கிரன் புத்திகள்
குருதசா – செவ்வாய், குரு, ராகு, சனி, சுக்கிரன் புத்திகள்
கேது தசா – செவ்வாய், ராகு, குரு, சனி, சுக்கிரன் புத்திகள்.
ராகு தசா – செவ்வாய், ராகு, குரு,சனி, சுக்கிரன் புத்திகள்
சுக்கிர தசா – செவ்வாய், ராகு, குரு, சனி, சுக்கிரன் புத்திகள்
மேற்படி தசா புத்திகளில் மனைவிக்கு கண்டாதி பிணிகளோ,மரணமோ, பிரிவினையோ நேரலாம் தோஷமுள்ள காலங்களில் திருமணமும் நடக்கலாம். தோஷமும் நேரலாம்.
புத்திர பாக்கியம்
சூரியன் தசா – சந்திரன், குரு, சனி,புதன், சுக்கிரன் புத்திகள்
சுக்கிரன் தசா – சந்திரன், குரு, சனி, புதன், சுக்கிரன் புத்திகள்
சனி தசா – சந்திரன், குரு, சனி, புதன், சுக்கிரன் புத்திகள்
புதன் தசா – சந்திரன், குரு, சனி, புதன், சுக்கிரன் புத்திகள்
ராகு தசா – சந்திரன், குரு, சனி, புதன், சுக்கிரன் புத்திகள்
மேற்படி காலங்கள் புத்திர பாக்கியம் ஏற்படவோ, புத்திரர்களுக்கு காலப்பாடி நடக்க வேண்டிய சுப நிகழ்ச்சிகளும் முன்னேற்றமோ நேரலாம்.
குழந்தைகளுக்கு கண்டம் நேரும் காலங்கள்
சந்திர தசா – செவ்வாய், ராகு ,கேது, சுக்கிரன் புத்திகள்
குரு தசா – செவ்வாய், ராகு, கேது, சுக்கிரன் புத்திகள்
புதன் தசா -செவ்வாய், ராகு, கேது, சுக்கிரன் புத்திகள்
செவ்வாய் தசா – செவ்வாய், ராகு, கேது, சுக்கிரன் புத்திகள்
கேது தசா -செவ்வாய், ராகு, கேது, சுக்கிரன் புத்திகள்
சூரியன் தசா – செவ்வாய், ராகு, கேது, சுக்கிரன் புத்திகள்
இக்காலங்களில் புத்திரர்களுக்கு கஷ்ட- நஷ்டங்களோ, தடங்கல்களோ, நோய் நொடியோ,மரணமோ நேரலாம். அல்லது பிரிவினை ஏற்படலாம்.
மாரகம் : குரு, சந்திரன், சுக்ரன்,செவ்வாய்
தாண்டவமாலை சந்திர காவியப்படி குருவும் சந்திரனுமே மாரகம் செய்வதில் வலிமை உள்ளவர்கள்.
சுக்கிரனும் மாரகன் என்பது ஜாதக அலங்கார நூலாசிரியரின் கருத்து. ஜாதக சந்திரிகையும், சுக்கிரன் மாரகன் என்கிறது.
7 ,12க்குடையவரானதால் செவ்வாய் மாரகன் என்றனர்.
ஸ்திர லக்னத்திற்கு 3,6,8 ஆகிய இரண்டு இடங்களும் மாறாக ஸ்தானமானதால் சந்திரனும், குருவும் முறையே மாரகராகின்றனர்.
6-க்குடையவரானதால் சுக்கிரனை மாரகன் என்கின்றனர்.
சுக்கிரனுக்கு லக்னாதிபத்தியமும் வந்ததால் அவர் கொல்ல மாட்டார்.
சுக்கிரனுக்கு நட்பானதால் செவ்வாய் கொல்ல மாட்டார்.
சந்திரன் சுக்கிரனுக்கு சத்துருவானதால் கொல்வார்.
குரு சுக்ரனுக்கு சத்துருவானதாலும் 8,11 ஆகிய இரு அசுபஸ்தானங்களுக்கும் அதிபத்தியம் பெற்றதால் குருவே வலுத்த மாரகாதிபதியாகிறார்.ஆகையால் குருவே கொல்வார்.கிரகங்களின் நிலைகளை ஆராய்ந்து யார் மாரகம் செய்வார் என்று முடிவு செய்ய வேண்டும்.
யோக காலங்கள்
சனி தசா – புதன், கேது, சுக்கிரன், சந்திரன், ராகு புத்திகள்
புதன் தசா – சுக்கிரன், சூரியன், ராகு, கேது புத்திகள்
சூரியன் தசா – சந்திரன், ராகு, குரு, புதன் புத்திகள்
செவ்வாய் தசா – சனி,கேது, சூரியன் புத்திகள்
யோகம் தரும் கிரக அமைப்புகள்
- சந்திரன் 4லிருந்து குரு அல்லது புதனால் பார்க்கப்பட்டால் யோகத்தை அளிப்பார்.
- செவ்வாய் 7ல் ஆட்சியானால் சுப பலனை அளிப்பார்.
- சூரியனும் குருவும் சேர்ந்து 11ல் இருந்தால் தீர்க்காயுளை அளிப்பார்கள்.
- குருவும் புதனும் சேர்ந்தாலோ ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலோ தனயோகம்.
- செவ்வாய் தனது தசையில் தனலாபத்தை அளிப்பார்.
- புதன் கேந்திரத்தில் இருந்தால் யோகத்தை அளிப்பார்.
- புதனும், சுக்கிரனும் கேந்திரத்திலும் குரு 7ல் இருந்தால் புதன் தசா சிறந்த யோகத்தை அளிக்கும்.
- செவ்வாயும் சுக்கிரனும் லக்னத்திலும் குரு ஒன்பதிலும் இருந்தால் குருவும் புதனும் தங்கள் தசையில் நல்ல பலன்களை அளிப்பார்கள்.
- சந்திரனும் சுக்கிரனும் ஆறிலும் புதனும் குருவும் 11-மிருந்தால் குரு தசை தனயோகமளிக்கும்.
- சுக்கிர தசை அபரிமிதமான தனத்தை அளிக்கும்.
மேலே கூறியவை ‘பாவார்த்த ரத்னா காராவில்’ சொல்லப்பட்டவை.
- சந்திரன் உச்சம் பெற அவருக்கு 7ல் குரு இருக்க, சூரியன் ஆட்சி பெற அவருக்கு 7ல் சனி இருக்க அரசியல் தலைவனாகி அரசாளும் யோகம் கிட்டும்.
- சூரியன் புதனும் பத்தில் இருக்க சுக்கிரன் 11 இல் உச்சம் பெற்றால் யோகம்.
- குரு சுக்கிரன் இருவரும் உச்சமானால் யோகம் நிறைய நிலம் உள்ளவன்.
- ஐந்துக்குடைய புதனும், ஒன்பதுக்கும் பத்துக்கும் உடைய சனியும்,6 அல்லது 9 அல்லது 10ல் இருந்தால் ராஜயோகம்.
- சுக்கிரனுக்கு 2,3 அல்லது 4ல் சனி இருந்தால் யோகம்.
- சனியும் சுக்கிரனும் சேர்வது நல்ல யோகம். காரணம் லக்னாதிபதி ஒன்பதாம் அதிபதி சேர்க்கை இவர்கள் 1, 2, 9 ,10 அல்லது 11 ல் இருந்தால் ராஜயோகம்.
- செவ்வாய் 7ல் ஆட்சி பெற சுக்கிரனும் சனியும் உச்சமானால் யோகம்.
- 7-க்குடைய செவ்வாயும் 9-க்குடைய சனியும் உச்சமானால் களத்திரத்தால் பாக்கியம் உண்டாகும்.
- லக்னம், 4 ,7, 10 ஆகிய நான்கு கேந்திரங்களிலும் கிரகங்கள் இருந்தால் யோகம்.